இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் மனிதனின் ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான சட்ட திட்டங்களை வகுத்துத் தருவதும் ஒழுக்க விழுமியங்களைப் போதிப்பதும் இஸ்லாத்திற்கேயுரிய தனிச் சிறப்பாகும்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர்களின் குணம் அல்-குர்ஆனாகவே இருந்தது எனப்பதிலளித்தார்கள் [நூல்: முஸ்லிம்]. நல்லொழுக்கத்தை இஸ்லாம் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “யார் நல்ல பண்பாடுகளைக் கொண்டிருக்கிறாரோ அவரே ஒரு முழுமையான முஃமினாவார்” [நூல்: திர்மிதி].
ஒழுக்கம் என்ற வார்த்தை நாம் கருதுவதைவிட மிக ஆழமான, விரிவான கருத்தைக் கொண்டதாகும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து மனிதனுக்கு அருளப்பட்ட அனைத்து வேதங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்தியுள்ளன. இறுதி மார்க்கத்தின் போதகரான பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலும் அது படர்ந்து விரிந்திருந்தது. இதனை ஒரு நபி மொழி கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. “நல்லொழுக்கங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே நான் நபியாக அனுப்பப்பட்டேன்”[நூல்: ஹாகிம்].
பண்பாட்டுத் துறையில் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு சமூகத்தை வழி நடத்த வந்த முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்
وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ
மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர்” [அல்-கலம்: 4]. மேற்படி வசனமானது திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட அத்தனை பெருங் குணங்களும் இறைவனின் கட்டளைகளாக அருளப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் ஒரு மனிதனிடம் என்னென்ன பண்பாடுகள், நற்குணங்கள் இருக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கிறதோ அத்தனையும் நபி(ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதை எடுத்துச் சொல்கிறது
உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர், பணக்காரர், ஏழை, நண்பன், எதிரி – இப்படி எந்த நபராக இருந்தாலும் நீதிக்குமுன் அனைவரும் சமனானவர்கள் என்பதற்கு முஹம்மத் (ஸல்)அவர்களின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்கள் இத்தகைய பண்புகளினூடாக உலகத்தில் நேர்மையாளருக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்
மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனை நற்பண்புகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தன. நற்குணங்களைப் பெற விரும்பும் ஒருவருக்கு நபிகள் நாயகத்தின் வரலாறு மாத்திரம் போதுமானதாகும்
முரட்டுத்தனம், கடும் சினம், எரிந்து விழுதல், சபித்தல், சாடுதல் போன்ற எவ்விதக் கெட்ட குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததில்லை. அன்பு, பாசம், இரக்கம், அடக்கம், எளிமை போன்ற அனைத்து நற்குணங்களுமே அவர்களிடம் காணப்பட்டன
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் ‘சீ’ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ‘ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ‘ஏன் இதைச் செய்யவில்லை’ என்றும் கேட்டதில்லை” [நூல்: புகாரி, முஸ்லிம்]
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கெட்ட செயல்கள் புரிபவராகவோ, சபிப்பவராகவோ, ஏசுபவராகவோ இருந்ததில்லை [நூல்: புகாரி
பலர் எண்ணுவதைப் போல அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பது மட்டும்தான் ஒழுக்கம் என்பதல்ல. அமைதியும் அடக்கமும் ஒழுக்கத்தின்பாற்பட்டதுதான். அவ்விரண்டும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், ஒழுக்கம் என்பது அவற்றுடன் இன்னும் பல அடிப்படைகளைக் கொண்டுள்ளது. அது மிகவும் விரிந்த பொருள் கொண்டதாகும். ஒரு மனிதனிடம் தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துகின்ற வல்லமை, அத்துடன் இடம், பொருள், காலம் என்ற வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் நேர்மையோடும் வாய்மையோடும் செயற்படும் மன வலிமை, சமமாக எல்லோரிடத்திலும் நீதியைச் சொல்கின்ற தைரியம், தீமையைக் கண்ட இடத்தில் அதனைத் தடுக்கின்ற துணிவு, நன்மையை ஏவுகின்ற நல்ல பண்பு, ஷரீஅத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற தாழ்மை போன்ற அனைத்தும் மனிதனிடத்தில் ஒருங்கே அமையப் பெற்றால் அவரே ஒழுக்க சீலர்; உத்தமர்
மனித வாழ்விற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டியது போன்ற சிறப்பான வழியை எவரும் காட்டித் தரவில்லை. அவர்களின் வாழ்க்கையை நவீன விஞ்ஞான உலகம் கூடப் போற்றுகின்றது. அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, சுய நலமின்மை, பிறர் நலம் பேணல், தன்னடக்கம், தயாளம், தூய சிந்தனை முதலான அனைத்து நற்குணங்களும் அன்றைய சமூகத்தைச் சீர் திருத்தின. எனவே, அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக
நன்றி:http://manaruddawa.org
No comments:
Post a Comment