அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, October 29, 2010

லட்சணக்கான காஷ்மீர் மக்கள் சொன்னதை நான் சொன்னேன்- அருந்திராய்.

பிரபல எழுத்தாளரும், புக்கர் பரிசு பெற்றவருமான அருந்ததி ராய், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்றும் ஸ்ரீநகரில் சமீபத்தில் நடந்த கருத்தரங்குகளில் பேசிய அவர்,`காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்றும், இந்தியாவின் ஒரு பகுதியாக அது ஒருபோதும் இருந்ததில்லை' என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் மீது, `ராஜதுரோக' வழக்கு பதிவு செய்வது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது கிலானி மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது காஷ்மீரில் தங்கியுள்ள அருந்ததி ராய் நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது:-
தேசத்துக்காக வருந்துகிறேன். காஷ்மீர் சுதந்திரம் பற்றி நான் பேசிய கருத்துகளுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலமாக அறிந்தேன். காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ, அதைத் தான் நானும் பேசினேன்.
எழுத்தாளர்களின் சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து வருந்துகிறேன். சமூக கொலைகாரர்கள், பெரிய அளவில் கொலைகளை நிகழ்த்தியவர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், காமுகர்கள் என அனைவரும் சுதந்திரமாக உலவுகின்றனர். ஆனால், நீதி கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து இரக்கப்படுகிறேன். இவ்வாறு அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

கஷ்மீர்:கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்ய கடத்திய 28 சிறுவர்கள் மீட்பு

ஜம்மு,அக்.25:ஜம்மு கஷ்மீர் மாநிலம் லேயிலிருந்து அரசு சார அமைப்பு ஒன்றின் பணியாளர்களால் கடத்திச் செல்லப்பட்ட 28 குழந்தைகளை போலீஸ் ஜம்முவில் வைத்து மீட்டது.

ஆறு அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்களை போலீஸ் கைதுச் செய்தது. 14 வயதிற்கு கீழே உள்ள சிறுவர்களைத்தான் இவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இச்சிறுவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் கடத்திச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரத்தின் தோக்ரஹார் பகுதியில் 'சுனேஹரா' என்ற அரசு சாரா அமைப்பு வாடகைக்கு எடுத்து நடத்திவரும் ஹாஸ்டலில் போலீசார் ரெய்டு நடத்திய பொழுதுதான் 24 ஆண் குழந்தைகளையும், 4 பெண் குழந்தைகளையும் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

சுனேஹரா அமைப்பின் தலைவர் விகாஸ் சர்மா, ரஞ்சன் சர்மா, புவா டேவிட், சுக்தேவ் மாசிஹ், கங்கன் தீப் சிங் (பொதுச்செயலாளர்) அவருடைய மனைவி மீனாட்சி (செயலாளர்) ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர்.

லேயில் சமீபத்தில் நடந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் வந்த இந்த அமைப்பினர் சிறுவர்,சிறுமிகளை வலுக்கட்டாயமாக ஜம்முவிற்கு கடத்திச் சென்றுள்ளனர்.

தங்களின் அனுமதியில்லாமல் சிறுவர், சிறுமிகளை ஜம்முவிற்கு கடத்திச் சென்றதாக அவர்களின் பாதுகாவலர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஈராக்கில் காணக்கொடூரமான தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது - விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியா அஸன்ஜா

லண்டன்,அக்.25:ஈராக்கில் கர்ணக்கொடூரமான தாக்குதல்களை ராணுவம் நடத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்று விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியா அஸன்ஜா தெரிவிக்கிறார்.


ஈராக்கில் போர் குற்றம் நடைப்பெற்றுள்ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இது என லண்டனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், ஆவணங்களை வெளியிட்ட நடவடிக்கையை அமெரிக்க ஜாயிண்ட் ஸ்டாஃப் சீஃப் சேர்மன் கண்டித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் செக்போஸ்டுகளில் சிக்கிய 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளான பெண்களையும், குழந்தைகளையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களை அநியாயமாக அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்பதை நேற்று முன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஈராக்குடன் தொடர்புடைய அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் ரகசிய ஆவணங்களிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என பிரிட்டனின் துணை பிரதமர் நிக் க்ளக் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களில் கூறப்படும் விஷயங்களில் தொடர்புடையவர்களின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்த நிக் க்ளக் 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பதற்கு அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரின் தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதள்
நன்றி: http://www.nashruminallah.blogspot.com/

டோனி பிளேயர் மனைவியின் உறவினர் இஸ்லாத்தை தழுவினார்

லண்டன்,அக்,26:முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செரி பிளேயரின் ஒன்றுவிட்ட சகோதரியும், மனித உரிமை மற்றும் பத்திரிகை பணியாளருமான லாரன் பூத் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.

ஈரானின் சர்வதேச செய்தி நிறுவனமான ப்ரஸ் டி.வியில் பணியாற்றும் லாரன் பூத் கடந்த செப்டம்பர் மாதம் ஈரானுக்குச் சென்ற பிறகு தமது கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையை துறப்பதற்கு முடிவு செய்தார்.

சர்வதேச அமைதி மற்றும் ஒற்றுமை (Global Peace and Unity) என்ற அமைப்பின் சார்பாக நடைப்பெற்ற பேரணியில் பங்கேற்ற லாரன் பூத் தனது தலையை மறைத்தவாறு (ஹிஜாப் அணிந்தவாறு) கலந்துக் கொண்டது அவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக அங்கீகரித்ததை செய்தியாக்கியது.

தான் இஸ்லாத்தை தழுவியதுக் குறித்து லாரன் பூத் கூறுகையில்: "நான் தற்பொழுது 5 நேரமும் தொழுகையை பேணி வருகிறேன். அடிக்கடி மஸ்ஜிதுக்கும் செல்வதுண்டு. புனித திருக்குர்ஆனை தினமும் ஓதி வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றோ அல்லது இரண்டோ க்ளாஸ் வைன்(மது) அருந்தாமல் எனக்கு இரவில் தூக்கம் வராது. ஆனால், கடந்த 45 தினங்களாக மதுவையோ பன்றி இறைச்சியையோ தொட்டதில்லை. முஸ்லிமாக மாற நான் தீர்மானித்ததோடு எனக்கு மதுவின் மீதிருந்த பிரியம் இல்லாமல் போனது.

அன்பு மிக்கவர்களும், அமைதியை விரும்புவர்களுமான முஸ்லிம் உம்மத்தில் (சமுதாயத்தில்) ஒரு அங்கமாக என்னை இணைத்ததில் நான் பெருமைக் கொள்கிறேன்." இவ்வாறு லாரன் பூத் கூறியுள்ளார்.

43 வயதான லாரன் பூத், டோனி பிளேயரின் மேற்காசியக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தவர் ஆவார். ஃபலஸ்தீன் பிரச்சனையில் டோனி பிளேயருக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கான தகுதி இல்லை என சமீபத்தில் லாரன் பூத் விமர்சித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Thursday, October 21, 2010

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்வற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது"

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும்செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார்."பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன்,

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம்.

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com


இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.


இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.

Reference:
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.htm

நன்றி : ஆஷிக் அஹ்மத் அ.(ethirkkural)

Thursday, October 14, 2010

ஹாஜி யார்?



ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். அதில் முகஸ்துதி, விளம்பர நோக்கு கலந்து விடக் கூடாது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)

வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:11லி14)

இந்த வசனங்கள் வணக்கத்தைக் கலப்பற்றதாக்கி வணங்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

ஆனால் இன்று வியாபாரத்தை விளம்பரப் படுத்துவது போல் ஹஜ்ஜையும் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பொருட்செலவு செய்து, பெரும் சிரமத்துடன் செய்கின்ற பெரும்பாலானவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லாமல் போவதைப் பார்க்க முடிகின்றது.

ஹஜ்ஜைப் பற்றி இறைவன் கூறும் போது, அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல்குர்ஆன் 2:196) என்று கூறுகின்றான்.

அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க பெரும்பாலும் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுபவர்கள் விளம்பர நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்க முடிகின்றது.

விருந்து வைபவங்கள்

இன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் வீடு வீடாகச் சென்று நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன், நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன் என்று பயணம் சொல்லும் வழக்கம் இருக்கின்றது. இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு ஒருவர் போகும் போது யாரிடமும் சென்று, நான் தொழுகைக்குப் போகின்றேன் என்று கூறுவதில்லை. அதுபோல் நான் நோன்பு வைக்கப் போகின்றேன் என்று யாரிடமும் போய் சொல் க் கொண்டிருப்பதில்லை. ஆனால் அதுபோன்ற கடமைகளில் ஒன்றான, அதே சமயம் வசதி படைத்தவர்கள் மட்டும் செய்யும் கடமையான ஹஜ்ஜுக்கு மட்டும் இவ்வாறு சொல்கின்றார்கள் என்றால் தங்களது செல்வத்தைத் தம்பட்டம் அடிப்பதாகவே இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஹஜ்ஜுக்குப் போகும் போது உயிருடன் திரும்புவோமோ இல்லையோ என்ற சந்தேகம் இருப்பதால் எல்லோரிடமும் சொல் விட்டுச் செல்கிறோம் என்று இதற்குக் காரணம் கூறுகின்றார்கள். ஆனால் இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் வேறு எந்தப் பயணம் மேற்கொண்டாலும் இதுபோன்று ஊர் முழுக்க பயணம் சொல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்வதில்லை.

மேலும் ஹஜ் என்பது முந்தைய காலத்தைப் போன்று நீண்ட காலப் பயணமாகவும் இல்லை. 30 நாட்களுக்குள் முடிந்து விடும் இலகுவான பயணமாக இன்று ஆகி விட்டது. இப்படியிருக்கையில் இவர்களின் இந்த வாதம் ஏற்புடையதாகாது.

இவ்வாறு பயணம் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. ஊரை அழைத்து விருந்து போடும் கொடுமையும் பல ஊர்களில் நடைபெறுகின்றது. ஹஜ் விருந்து என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து பெரிய விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தானே என்று இவர்கள் கேட்கலாம். ஆனால் ஒரு வணக்கத்தை மையப்படுத்தி விருந்து வைக்க வேண்டுமானால் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுத ல் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பித்அத் எனும் வழிகேடாகவே அமையும். நபி (ஸல்) அவர்களும், அவர்களது காலத்தில் எத்தனையோ நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளனர். ஆனால் அதற்காக விருந்தளித்ததாக எந்த ஹதீசும் இல்லை.

இந்த ஹஜ் விருந்துகள் ஒரு சமூக நிர்ப்பந்தமாகவே ஆக்கப்பட்டு வருகின்றன. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விருந்து வைக்கவில்லையென்றால் அது ஏதோ மட்டமான ஒரு செயல் போல கருதப்படும் நிலையும் உள்ளது. பொதுவாக ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவையென்றால் விருந்து, வழியனுப்பு என்ற விளம்பர வகைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.

ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் ஹஜ் கடமையாகி விடும் என்றால், இந்த விருந்துகளுக்காக மேலும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வரை அவர் ஹஜ் செய்யாமல் தாமதிக்கின்றார். விருந்து வைக்காமல் ஹஜ்ஜுக்குச் சென்றால் நம்மை மக்கள் மதிக்க மாட்டார்களே என்று இவர் நினைப்பது தான் இதற்குக் காரணம். இதுபோன்று ஒரு நிர்ப்பந்தத்தை இந்த ஹஜ் விருந்துகள் ஏற்படுத்தியுள்ளன.

சில ஊர்களில் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், சில ஊர்களில் திரும்பி வரும் போதும், சில ஊர்களில் இரண்டு வேளைகளிலும் இத்தகைய விருந்துகள் வைக்கப்படுகின்றன. வணக்கத்தை விளம்பரமாக்கி, மற்றவர்கள் ஹஜ் செய்வதைத் தடுக்கும் இத்தகைய விருந்துகளை சமுதாயம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

ஹாஜி பட்டம்

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் மற்றொரு நடைமுறை ஹாஜி பட்டம். அதுவரை சாதாரண கருத்த ராவுத்தராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி கருத்த ராவுத்தராகி விடுவார். அதன் பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும், இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம்.

ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்த பிறகு தமது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி பட்டத்தைச் சூட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர் என்றால் இதிலும் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து நிற்கின்றது.

நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளைப் பாழ்ப்படுத்தி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

அரசியல்தனமான தீர்ப்பு! – தினமணியின் தலையங்கம்!



ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, “ராமஜென்மபூமி’ என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், “நம்பிக்கை’யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, “இது ராமர் ஜென்மபூமிதானா?’ என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே… ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே…

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன… வேறென்ன…!

தினமணி – தலையங்கம் 1-10-2010

Thursday, October 7, 2010

அயோத்தீ தீர்ப்பு- ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேள்வி கணை நிகழ்ச்சி (Video)




நன்றி:tmmk.in

மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!


بســــم الله الـر حـمـن الرحـــيــم
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.

அப்போது நபி[ஸல்] அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கூறினார்கள்.

அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.

ஆதாரம் நூல்; புஹாரி எண் 5367

அன்பானவர்களே! சத்திய சஹாபாக்கள் மார்க்கத்திற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கும் தியாக சீலர்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் மார்க்கத்தின் மற்றொரு அம்சமான உலக வாழ்க்கையிலும் இறைவன் விதித்துள்ள கட்டளைகளை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது.

ஒரு ஆண்மகனுக்கு தனது பெற்றோரை, தனது உடன் பிறந்தோரை, உறவினரை பராமரிக்கும் கடமை உள்ளது. பெற்றோர் மரணித்து விட்டால் உடன்பிறந்தோரை பராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஆண்மகன் மீது விதியாகி விடுகிறது. ஆனால் இன்றைய நிலையோ, திருமணம் ஆகும்வரை பெற்றோரை தூக்கி வைத்து கொண்டதும் ஆண்மகன், திருமணம் முடிந்த கையோடு, மனைவி சொல்லே மந்திரம் என மனைவியின் முந்தானை நுனியை பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறான்.

தனிக்குடித்தனம் தவறல்ல. ஆனால் அதற்கு பின் தனது பெற்றோரையோ, உடன் பிறந்தோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. இதன் விளைவாக உழைக்கமுடியாத பெற்றோர்கள் 'கையேந்தி' வயிற்றை நிரப்புகிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளுக்கு திருமண வயதை கடந்த பின்னும் திருமணம் நடத்திட நாதியில்லை. இதன் விளைவாக முதிர்கன்னிகளின் ஏக்க மூச்சு எமது வீட்டு ஜன்னல் கம்பிகளையும் துருப்பிடிக்க செய்துவிட்டது.

இந்நிலைக்கு என்ன காரணம்..? மார்க்கம் என்றால் வெறுமனே தொழுகை நோன்பு போன்ற சில அமல்களே என்ற குறுகிய வட்டத்தை தாமாகவே கற்பனை செய்து கொண்டு, இவைகளை சரியாக செய்தால் போதும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கவனிப்பது கட்டாயமுமல்ல. மார்க்கத்திற்கு உட்பட்டதுமல்ல எனக் கருதும் மனநிலைதான்.

ஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்பது, அமல்களில் மட்டுமல்ல, அன்பானவர்களை கவனிப்பதிலும்தான் உள்ளது என்பதை விளங்கியிருந்தார்கள். எனவேதான் இளைஞரான ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள், கன்னிப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டிளம் காளை; சகோதரிகளின் நலனை கவனத்தில் கொண்டு, விதவையான பக்குவமான பெண்ணை மணந்து, தனது உடன்பிறந்தோர் மீதான தனது கடமையையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள் என்றால்,

இங்குதான் சஹாபாக்கள் நிற்கிறார்கள்; அவர்களின் தியாக உள்ளம்- இறையச்சம் முன்னே நிற்கிறது.
' உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என்ற திருத்தூதரின் பொன்மொழியை மெய்பிக்கும் வாய்மையாளர்களாக திகழ்கிறார்கள் சஹாபாக்கள்.

எனவேதான சொல்கிறோம். அந்த நல்லறத் தோழர்களை ஒருபோதும் நாம் எட்டிப் பிடிக்கமுடியாது என்று.
இடுகையிட்டது முகவை எஸ்.அப்பாஸ் நேரம் 9:20 am
லேபிள்கள்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)


நன்றி:http://sahaabaakkal.blogspot.com

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்


எஸ்.எல்.எம். – காத்தான்குடி

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.

தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள் தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.

மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம் என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.

இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில் காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புஹாரி 5778

இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்

‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி)
நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.

‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘
ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)


thanks:http://dharulathar.com/

அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்