Thursday, October 7, 2010
மார்க்கத்தில் மட்டுமல்ல; உலக வாழ்க்கையிலும் தியாகம்!
بســــم الله الـر حـمـن الرحـــيــم
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன்.
அப்போது நபி[ஸல்] அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கூறினார்கள்.
அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.
ஆதாரம் நூல்; புஹாரி எண் 5367
அன்பானவர்களே! சத்திய சஹாபாக்கள் மார்க்கத்திற்காக தங்களது இன்னுயிரையும் இழக்கும் தியாக சீலர்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் மார்க்கத்தின் மற்றொரு அம்சமான உலக வாழ்க்கையிலும் இறைவன் விதித்துள்ள கட்டளைகளை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது.
ஒரு ஆண்மகனுக்கு தனது பெற்றோரை, தனது உடன் பிறந்தோரை, உறவினரை பராமரிக்கும் கடமை உள்ளது. பெற்றோர் மரணித்து விட்டால் உடன்பிறந்தோரை பராமரிக்கும் முழுப் பொறுப்பும் ஆண்மகன் மீது விதியாகி விடுகிறது. ஆனால் இன்றைய நிலையோ, திருமணம் ஆகும்வரை பெற்றோரை தூக்கி வைத்து கொண்டதும் ஆண்மகன், திருமணம் முடிந்த கையோடு, மனைவி சொல்லே மந்திரம் என மனைவியின் முந்தானை நுனியை பிடித்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறான்.
தனிக்குடித்தனம் தவறல்ல. ஆனால் அதற்கு பின் தனது பெற்றோரையோ, உடன் பிறந்தோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. இதன் விளைவாக உழைக்கமுடியாத பெற்றோர்கள் 'கையேந்தி' வயிற்றை நிரப்புகிறார்கள். உடன்பிறந்த சகோதரிகளுக்கு திருமண வயதை கடந்த பின்னும் திருமணம் நடத்திட நாதியில்லை. இதன் விளைவாக முதிர்கன்னிகளின் ஏக்க மூச்சு எமது வீட்டு ஜன்னல் கம்பிகளையும் துருப்பிடிக்க செய்துவிட்டது.
இந்நிலைக்கு என்ன காரணம்..? மார்க்கம் என்றால் வெறுமனே தொழுகை நோன்பு போன்ற சில அமல்களே என்ற குறுகிய வட்டத்தை தாமாகவே கற்பனை செய்து கொண்டு, இவைகளை சரியாக செய்தால் போதும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கவனிப்பது கட்டாயமுமல்ல. மார்க்கத்திற்கு உட்பட்டதுமல்ல எனக் கருதும் மனநிலைதான்.
ஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்பது, அமல்களில் மட்டுமல்ல, அன்பானவர்களை கவனிப்பதிலும்தான் உள்ளது என்பதை விளங்கியிருந்தார்கள். எனவேதான் இளைஞரான ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள், கன்னிப்பெண்ணை மணக்க வேண்டிய கட்டிளம் காளை; சகோதரிகளின் நலனை கவனத்தில் கொண்டு, விதவையான பக்குவமான பெண்ணை மணந்து, தனது உடன்பிறந்தோர் மீதான தனது கடமையையும் முழுமையாக நிறைவேற்றுகிறார்கள் என்றால்,
இங்குதான் சஹாபாக்கள் நிற்கிறார்கள்; அவர்களின் தியாக உள்ளம்- இறையச்சம் முன்னே நிற்கிறது.
' உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என்ற திருத்தூதரின் பொன்மொழியை மெய்பிக்கும் வாய்மையாளர்களாக திகழ்கிறார்கள் சஹாபாக்கள்.
எனவேதான சொல்கிறோம். அந்த நல்லறத் தோழர்களை ஒருபோதும் நாம் எட்டிப் பிடிக்கமுடியாது என்று.
இடுகையிட்டது முகவை எஸ்.அப்பாஸ் நேரம் 9:20 am
லேபிள்கள்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நன்றி:http://sahaabaakkal.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment