அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Sunday, May 20, 2012

முன்மாதிரி அரசியல் தலைவர்


புஹாரி 2739 – 


‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461

பத்து ஆண்டுகள் பேரரசராக ஆட்சி புரிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்களின் பெயர்ப்பட்டியலையே இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்து கின்றது.

ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148

அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)

பாராளுமன்ற, மாகாண, நகர, உள்ளூராட்சி போன்ற தேர்தல்களுக்காக இலட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டி அக்கிரமம், அநியாயம், அச்சுறுத்தல் போன்ற அசுத்தங்களிலும் ஈடுபட்டு இஸ்லாமிய நெறிமுறைகள் எதையுமே பேணாது, எப்படியும் வெற்றி பெற்று உலக சுகபோகங்களில் திளைக்க வேண்டுமென்ற மோகத்தில் பலர் அரசியலில் ஈடுபட்டிருக்கும் இக்காலத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் தமது பாசறையில் வளர்த்த உத்தமர் ஒருவர் சமுதாய நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு பதவி கேட்டதற்கு மேற்கண்டவாறு உபதேசிக்கிறார்கள். இது அண்ணலாரின் அரசியல் ஆளுமையையே காட்டுகிறது.

இஸ்லாமியக் கடமைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுப் போதனைகள், நடத்தை சார்ந்த விஷயங்கள் போன்ற துறைகளில் வழி காட்டிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திய அதே நேரம் தான் ஒரு முன்மாதிரி மிக்க அரசியல்வாதி என்பதையும் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறார்கள். தனக்கிருந்த ஆன்மீகப் பலத்தை வைத்து அரசியல் இலாபம் பெற அவர்கள் ஒரு போதும் முற்படவில்லை என்பதை நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதியைப் பொறுத்தவரை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடன் இதய சுத்தியுடனேயே நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனையே மையப்படுத்தி மறுமை விமோசனததிற்கான சீர்திருத்தப் பணிகளையே அவர் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி நிமித்தம் பெறும் நிதிகளில் சுயலாபம் பெறுவதோ, அவற்றை துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்துவதோ கூடாது. இலஞ்சம், ஊழல், மோசடி போன்ற தீய விவகாரங்களை விட்டும் அவர் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மார்க்க விழுமியங்கள் பேணப்பட்டதாகவே அண்ணலாரின் அரசியல் வாழ்வு அமைந்திருந்தது.

இன்று எமது அரசியல்வாதிகளில் பலர் அதிகாரத்தைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் சொத்துக்கள் வாங்கிக் குவித்தல், அறுசுவை உணவுகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்வு மேற்கொள்ளல், ஆடம்பரப் பொருட்கள் பாவனை, அதிவுயர் உடைகள், மற்றும் குளிரூட்டப்பட்ட வாகன வசதிகள் ஏற்பாடு என அவர்களது ஆடம்பரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதனால்தான் அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் போன்றோரின் அதிகார துஷ்பிரயோகங்களால் ஏற்படும் இலஞ்ச ஊழல்களை விசாரிக்கவென ‘இலஞ்ச ஊழல் ஆணைக் குழு’ என்றொரு திணைக்களம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்டிருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அரசியல் நடவடிக்கைகளோ இவை எல்லாவற்றையும் விட முற்றிலும் வித்தியாசமாகவே காணப்படுகின்றது.

எமது அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கை விட பன்மடங்கு செலவாக்கே அன்று மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இருந்தது. நுபுவ்வத்தின் பணியை பூரணமாக நிறைவேற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த மாநபி(ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதையும் கூறத் தேவையில்லை.

நபிகளாரின் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பூரணமாகப் பின்பற்றக் கூடிய தொண்டர்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். இப்படி எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தி அவர்கள் பொருள் திரட்ட வில்லை. வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வில்லை. தமது பெயரிலும் தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்க வில்லை. அரண்மனையுடன் கூடிய சொகுசு வாழ்கை வாழவில்லை என்பதையே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸ் எடுத்தியம்புகிறது.

அரசியல்வாதிகளில் பலர் இன்று தாம் பெற்றுள்ள அதிகாரத்தைத் தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்துகின்றார்கள். அறுசுவை உணவுகளுக்கும் விதவிதமான பானங்களுக்கும் பணங்கள் பல்லாயிரக் கணக்கில் வீண்விரயமாக்கப் படுகின்றன. ஆனால், இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அப்பேரரசர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.

‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)

‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)

மேற்படி ஹதீஸ்களும், இதுபோன்றே இன்றும் பல ஹதீஸ்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவோ, செல்வத்தைக் குவிக்கவோ முனையவில்லை என்பதைத் தெளிவுற விளக்குவதை அறியலாம்.

ஆன்மீக நெறியுடன் கூடிய அரசியல் பாசறையில் தன்னால் வளர்க்கப்பட்ட அதிகாரிகளிடம் கூட இலஞ்ச, ஊழல் வாடை வீசுவதையோ, மோசடிகள் இடம் பெறுவதையோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறவே விரும்பவில்லை. அமானித்தைப் பேணுவதில் அதிகாரிகளிடம் காட்டிய கண்டிப்பு, அன்னாரது முன்மாதிரி மிக்க அரசியல் கலாச்சாரத்தையே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறன்றது.

‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)

தந்தைக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிள்ளைகளும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களும் சகாக்களும் எமது மக்களின் வரிப்பணமாகிய அரசுக் கருவூலத்தில் கையாடல்கள் செய்வதும் அவற்றை வீண் சுகபோகங்களுக்காக அள்ளி இறைப்பதும் தற்கால அரசியலில் உணரப்படாத தீமைகளாகவே காட்சியளிக்கின்றன. திறை சேரிப் பணங்களின் இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு அரசியல் வாதிகளின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், முன்மாதிரி மிகு அரசியல்வாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறைசேரி விடயத்தில் தன்னையும் சுத்தப்படுத்தி, தனது குடும்பத்தினரையும் எந்தளவு பாதுகாத்து இருக்கிறார்கள் என்பதை பதவிக்கு வரும் ஆட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தம்மை ஒருமுறை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485, 1491, 3072)

இங்கே நபி (ஸல்) அவர்களின் பேரனாக இருந்தவர் அப்போது சிறுவயதுப் பாலகர். குழந்தைகளின் தவறுகளுக்கு இறைவனும் தண்டனை கொடுப்பதில்லை. இத்தகைய தவறுகளை மனிதர்களில் எவரும் பொருட்படுத்துவதுமில்லை. இருப்பினும் அரசுக் கருவூலம் என்பது அமானிதமாதலால் அதை எம்முறையிலும் துஷ்பிரயோகம் செய்யலாகாது என்ற நபிகளாரின் உறுதிமிகு கொள்கையே வாயில் போட்ட ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விழுங்க விடாமல் துப்பச் செய்தமைக்கான காரணமாக இங்கே அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்களது ஆடம்பரமில்லாத எளிமையான அரசியலுக்கும், தான், குடும்பம், உறவினர் என்ற சுயநலமில்லா நடவடிக்கைகளுக்கும் இன்னும் பல சான்றுகளை அவர்களது தூய வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு முறை யுத்தக் கைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர். அப்போது வீட்டு வேலைகள் செய்து கையில் தழும்புகளும் ஆடைகள் அழுக்கடைந்து முகம் வாடி வதங்கிய நிலையிலும் காணப்பட்ட தன்னுடைய மனைவி பாத்திமா (ரலி) அவர்களைப் பரிதாபக் கண்கொண்டு பார்த்த அலி (ரலி) அவர்கள், உன் தந்தையிடம் சென்று உனக்கொரு பணியாளைக் கேட்கலாமே! உனக்கு அது உதவியாக இருக்குமே! என வேண்ட, பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் தந்தையின் இல்லம் விரைகிறார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். அங்கு சென்று தந்தையிடம் பணியாள் கேட்ட போது நபி ஸல் அவர்கள், ‘அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) பட்டினியில் படுத்திருக்க உங்களுக்குப் பணியாளைத் தர என்னால் முடியாது. ஆயினும் பணியாளளை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு, உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 விடுத்தம் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க: பத்ஹுல் பாரி 6318 ஆம் ஹதீஸ் விளக்கவுரை)

பாத்திமா (ரலி) அவர்கள் யார்? பெருமானார் (ஸல்) அவர்களின் அளவில்லா அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அன்பு மகள். சுவனத்துப் பெண்களின் தலைவி. இப்படியிருந்தும் பொதுச் சொத்துக்கள் பாவனை விடயத்தில் குடும்பத்திற்கே கொடுக்காமல் கண்டிப்புடன் அண்ணலார் அரசியல் நடாத்தியிருக்கிறார்கள் என்றால் அது பேராச்சரியம் தான்.

இன்றைய அரசியல் காலாச்சாரம் வெறுமனே உலகாதாய சிந்தனைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன. எனவே தான் அரசியல் மேதை நபி (ஸல்) அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் மேற்படி வெளிப்பாடுகளில் ஒரு துளியைக்கூட இன்றைய அரசியல் வாதிகளிடம் காணக்கிடைக்க முடியவில்லை. உட்பகை, அதிகாரப் போட்டி, பதவி மோகம், உட்கட்சி சண்டைகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சொகுசு வாழ்வு, சமூக சிந்தனையின்மை என்பன உலகாதாய சிந்தனைகளில் அவர்கள் ஊறிவிட்டனர் என்பதற்குக் கட்டியங் கூறுகின்றன.

அரசியல் பிரவேசத்தின் மூலம் அதிகாரம் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அடுத்த முக்கிய விடயமே ஆடம்பர வீடும் அதற்கான பாவனைப் பொருட்கள் ஏற்பாடுகளாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட வீடு, அதற்குள் அலங்கார மின் விளக்குகள் மற்றும் பல நானாவிதப் பொருட்கள் ஆகியன குறுகிய காலத்திற்குள் அரசியல் அதிகாரம் பெறுபவர் சம்பாதித்து விடுபவைகளாகும். ஆனால், பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் அரண்மனையையும் பாவித்த தளபாடங்களையும் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம்.

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜதாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரல்களால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்துவிட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 382, 513, 1209)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்’. நூல்: புகாரி 729.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அடையாளம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று இளைப்பாறி விட்டுச் செல்லக் கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்திற்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவுதான் எனக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ளது’ எனக் கூறி நிராகரித்து விட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), நூற்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099)

எனவே, பெருமானார் ஸல் அவர்களின் இஸ்லாமிய அரசியல் போக்கில் உலகாதாய சிந்தனைகள் எதுவுமே இழையோடி இருக்க வில்லை என்பதை மேற்படி விளக்கங்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் சுயநலத்துடன் கூடிய உலகாதாய சிந்தனைகளை விட்டும் தூரமாகி இருக்கும் அரசியல்வாதிகளாலேயே இஸ்லாமிய அரசியலின் எதிர்பார்ப்புகளுக்கு செயல் வடிவமும் கொடுக்க முடியும் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகின்றது. நபிகளார் இதற்கு சிறந்ததோர் முன்மாதிரி! அரசியல் வாழ்வில் இணைந்திருப்போர் சுயவிசாரணையுடன் இதை மேற்கொள்வார்களேயானால் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியைக் காணலாம்.
நன்றி:
மௌலவி இஸ்மாயில் ஸலபி
 Engr.Sulthan

Thursday, May 17, 2012

அழைப்புப்பணி நமது அழைப்புப்பணி

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?


இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால் இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.

1. நமது மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம் அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.

2. யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

3. அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள் பாராட்டுகள் கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.

4. இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாதாரணமாக ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது. முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும். குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம். உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே. ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம் இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதை நாம் கைவிட வேண்டும்.

இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள் அறிவுரைகள் அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம். இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம். இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான். அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான். சரியோ தவறோ நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம். இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம். குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல. அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.

இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம். அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம் இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவதம் சரியாகாது.

ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன. வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள் விஷ ஜந்துக்கள் வீட்டை அண்டாது. முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் ‘D’ சக்தி கிடைக்கின்றது. நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும் மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் ’அறிவியல்பூர்வமாய்’ என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர். இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.

இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம். நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை. பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும் மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான். அவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள். நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல் விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை. கேட்டோம் கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம். இதுதான் உண்மையான ஈமானும் கூட. அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும் உறுதியும் ஏற்படுகின்றது. ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.

கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள். நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் கொள்கையைப் பற்றியும் போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இன இழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.

இவர்களது பேட்டிகளையும் அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறோம். இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள். இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம். உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது. சாதாரணமான ஒருவருடைய மனதில் ” அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால் இஸ்லாமை தழுவியிருக்கலாமே ” என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

அருமைச் சகோதரர்களே! நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை. இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம் உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.

மேலும் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும் அதன் செயல் வடிவ வசீகரத்தையும் கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம் தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள் மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள்.

இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள். இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது. நிலைகுலையாமை இருக்காது. “உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது! ” என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும். இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை தோற்றுவித்துவிடும்.

அருமைச் சகோதரர்களே! உலகில் நல்ல அறவுரைகளுக்கும் தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே மக்கள் கருதுவார்கள்.

இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது. அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம். தனிமனித மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.

இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது. இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அவர்கள் தான் “நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நோய் நொடிகள் குணமாகும். கடன் தொல்லைகள் தீரும். முடவர்கள் நடப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும்! ” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான். அந்த “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஏகத்துவ பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது. இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை. அனைத்து நபிமார்களும் “என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!” என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது. ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன. விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை. அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது.

உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது. பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர் அன்றைய தலைவர்கள். அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும் ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது. ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள் துன்பம் தரலானார்கள் நாடு கடத்தினார்கள் கொலை செய்யவும் முற்பட்டார்கள்.

எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்களது தலைமையையே பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?

தலைமையும் அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும். ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது. உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

நன்மைகளை செய்கிறோம். தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம். இதுவும் சரியான வழிமுறை அன்று!. ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி இஸ்திகாமத் நிலைகுலையாமை தென்படாது.

ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதன் ஆழ அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.

ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான். “நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?. அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே. உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

” அதற்கு அபுஜஹ்ல் “அவர் சொல்வது உண்மைதான்!. ஆனால் அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா? தன்னை ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அவர் “நில்” என்றால் நிற்க வேண்டும் “உட்கார்” என்றால் உட்கார வேண்டும். இது என்னால் முடியாது!” என்று கூறினான். இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.

இஸ்லாமை சொல்லும் போது அடி விழும். உதை வாங்க நேரிடும். அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!. அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை. இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!. இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!. நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.

ஆகவே மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை நாம் அறிமுகப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்!!

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்