அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, July 29, 2011

நோன்பின் நோக்கமும், சிறப்பும் எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ முஹை



Articleநோன்பின் நோக்கம்

பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.

தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

நோன்பின் சிறப்பு!

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்புவைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

”நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

இரத்தம் குத்தி எடுத்தல்

ஆரம்பத்தில் ஜாஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்.” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர், ஸாபித் அல் புன்னாணி நூல்: புகாரி.

(மருத்துவ சோதனைக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்புமுறியாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்)

கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள்.

ஷவ்வால் மாதத்தில் நோன்பு

யார் ரமளான் மாதத்தில் நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ”அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

”நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்கும் மற்றொரு நபிவழி

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிவிக்கும் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ”ஆம்” என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

”உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாட்களில் நோன்பு இல்லை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

தொடர் நோன்பு கூடாது

”நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ”நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நன்றி:இஸ்லாம்கல்வி.காம்


நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்


முஹிப்புல் இஸ்லாம்

1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் - அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4).

2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)

3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)

4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)

தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்:
தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம்.

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர - தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது - என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா?

இஸ்லாம், தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும், உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் - இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் - குறுகிய வரையறைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

தவ்ஹீத், குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட - தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்ற மாயத் தோற்றம் - தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பரத் தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்த பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாயம் முழுமைக்கும், எல்லாக் காலங்களிலும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக, மிக அழுத்தமாய் இங்கே கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.

தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப் பெயர் அல்ல.
“தவ்ஹீத்” இஸ்லாத்தின் மூலக் கொள்கை - அன்றி-ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமை அல்ல. ஒரு கொள்கைப் பிரிவார், தங்களைத் தனிமைப்படுத்தி, பிரித்துக் காட்ட, தங்கள் கூட்டமைப்பிற்கு இட்டுக் கொள்ளும் பிரிவுப் பெயருமல்ல. இதை சம்பந்தப்பட்ட அனைவரின் சிந்தனைக்கும் கொண்டு வருகிறோம். தவ்ஹீத்-ஒரு கொள்கைப் பிரிவாருக்கான தனிப் பெயருமல்ல: பிரிவுப் பெயருமல்ல: இது துவக்கத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.

சீரிய சிந்தனையாளர்கள் கூட மற்றவர்களிடமிருந்து, தங்களைத் தவ்ஹீத் வாதிகள் என்றே இனம் பிரித்துக் காட்டினார்கள். தங்களின் கூட்டமைப்பு- அஹ்லுஸ் ஸுன்னத் - வல் - ஜமாஅத்தார்களிடமிருந்து பிரத்தியேகப்படுத்தி, பிரித்துக்காட்ட- தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக் கொண்டார்கள். அதில் பெருமைப்பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று, இவர்கள் பங்கிற்கு, இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவைத் தோற்றுவித்து விட்டார்கள். எடுத்துக் காட்டினால், சம்மந்தப்பட்டவர்கள் ஜீரணிப்பது மிக, மிக சிரமமே.. சீறிப்பாய்கிறார்கள். என்ன செய்வது? உண்மை - சத்தியம் கசக்கத் தானே செய்யும்.

எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தபோது, தவ்ஹீதைத் தனிப்படுத்தும் “ஸ்லோகம்;” எங்காவது எப்போதாவது கேட்கும் முனகலாயிருந்தது. அப்போது, பிரிவுப் பெயர் எதிர்ப்பாளர்கள் கூட - இதைப் பொருட்படுத்தவில்லை. அலட்சியப்படுத்திவிட்டார்கள் போலும்" அல்ல அல்ல. இது காலப்போக்கில் கரைந்து விடும் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். ஆனால் எண்;ணிக்கையில் இவர்கள் கூடுதலாகியபோது, முன கலாயிருந்தது பரவலான முழக்கமாயிற்று.

பத்து, நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் எ;ன்றோ, அதைவிட கூடுதலாகவோ - பக்தர்கள் கூட்டம் கூடியவுடன் - குழுக்கள் அல்லது சபைகள், குரூப்கள் அமைத்துக் கொள்ளவோ - இயக்கங்கள் காணவோ - அமைப்புகள் ஏற்படுத்தவோ - ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்) அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக -

ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்: ஒன்றுபடுத்தப்படவும் வேண்டும் என்ற உன்னத இலட்சியத்திற்காக அல்லாஹ்வால், அருளப்பட்ட அருட்கொடையே - ஓரிறைக் கொள்கை.

- இதை நாமாகக் கூறவில்லை. இறை நெறிநூலும், இறை தூதர்(ஸல்) அவர்கள் வாழ்க்கை வழிகாட்டுதலும் நமக்கிதை ஐயத்திற்கிடமின்றி உணர்த்திக் காட்டுகின்றன. மாதிரிக்கு சில இறைவாக்குகளை மட்டும் தலைப்பில் முகப்புரையாக அன்பர்கள் சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளோம். நெறிநூல் அல்குர்ஆனை உற்று நோக்கி இதை உணர்ந்து கொள்ளலாம். இல்லையெனில் மேலோட்டமாய் நோட்ட மிட்டாலே புரிந்து கொள்ளலாம்.

மனித சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஓரிறைக்கொள்கை - இறை ஒருமை!
பல தெய்வ வழிகேடுகளை - வழிபாடுகளாகவும், ஒழுக்கக் கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதைப் பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்களையும், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக் கொண்டும், அனைத்து அநாகரிகங்களையும் நன்மைகளாகவும்;, புண்ணியங்களாகவும், விலங்கினும் கீழாய் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது? ஓரிறைக் கொள்கை! இறை ஒருமை!

இஸ்லாமிய வாழ்க்கை நெறியின்; மூலக் கொள்கை, இறைவன், ஏகன், அநேகன் அல்லன்" இறைவனை-இறைவனாகவும், மனிதனை மனிதனாகவும் வேறுபடுத்தி இனங்காட்டும் ஒப்பற்றக் கொள்கை! இறைவனை மனிதனோடும், மனிதனையும், மனிதர்களையும் இறைவனோடும் இரண்டறக் கலக்கும் இரு (வழிகே)ட்டில் மூழ்கிக் கெட்டழிந்த மனித சமுதாயம் மீட்சிப் பெறச் செய்த கொள்கை ஓரிறைக் கொள்கை! (அல்குர்ஆன் 112;:1-4)

இவ்வற்புதம், இறுதி நெறிநூல் யாருக்கருளப்பட்டதோ - அந்த இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், 23 ஆண்டுகளில், அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்த பேருண்மை இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சரியத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிகமிக (எளிதாய் இல்லை) கஷ்டமாயிருக்கிறது. ஏன்?

ஒற்றுமையின் எதிர்ப்பதங்கள்:
இவர்கள் வாழ்வு - ஒற்றுமைக்கு எதிர்ப்பதமாகவே அமைந்திருக்கிறது. பிரிந்து வாழ்வதிலும் பிளவுபடுவதிலும் இன்புறும் இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு, இஸ்லாம், ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில், முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது. இன்றைய பெயர் தாங்கிகள்-ஒற்றுமை ஒற்றுமை என்று பிதற்றுவதெல்லாம் வெறும் பிரிவினைவாதங்களே! உண்மை ஒற்றுமையல்ல!

இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் குழு மனப்பான்மைக் கொண்டவர்களே! அன்றி சமுதாய உணர்வு உள்ளவர்கள் அல்ல. ஒரு சிலர் விதிவிலக்காய் இருக்கலாம். விதிவிலக்கு பொது நியதியல்ல.

தற்காலிகமாய் பல குழுக்கள் ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அல்லது ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறும் முன் அல்லது நிறைவுற்றதும் மீண்டும் பிரிந்து விடுவதும் சமுதாயமாகுமா? உலகியல் நியதிப்படி இதை ஒற்றுமை என்று வாதிடலாம். இஸ்லாமிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு, அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்க முடியுமா? ஒருக்காலும் ஏற்க முடியாது.

பிரிவுகளும், பிளவுண்ட குரூப்பிஸ போக்குகளும் (எப்படி ஒற்றுமையாக முடியும்? ஒருக்காலும் அது ஒற்றுமையாகாது) அணி மனப்பான்மையும், அவற்றிற்கு இவர்கள் சுய வாழ்வு அனுபவங்களும் மிகப் பெரிய சாட்சியங்களாகும்.

இவர்கள் நடைமுறைக்கும், சொந்த அனுபவத்திற்கும், பரம்பரை வழக்கத்திற்கும், மூதாதையர்கள், பெரும்பான்மையோர் முடிவிற்கும் மாற்றமான ஒன்றை - ஏற்பது மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் கடினமே! சாத்தியமே இல்லாத விஷயமாய் தெரிகிறது. இது மனிதன் அல்லது மனிதர்கள், மனித இயல்பின் அடிப்படையில் கண்ட முடிவு. ஆனால் மார்க்க முடிவோ - இதற்கு முரணாயிருக்கிறது. நெறிநூலிலிருந்தும், நபி வழி காட்டுதல்களிலிருந்து நேரடியாக அல்லது அவைகளுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியவைகள் மட்டும் மார்க்க முடிவுகளாகும்.

அல்லாஹ்வும், இறைத்தூதரும் ஒரு கருத்து அல்லது கொள்கை குறித்து, இறுதி முடிவெடுத்து விட்டால், அதில் எக்கார ணத்தை முன்னிட்டும் வேறு அபிப்பிராயம் அல்லது மாற்றுக் கருத்து ஏற்படுத்திக் கொள்ள எந்த முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதிகாரமில்லை. மாற்றுக் கருத்து கொள்பவர் வழிகேட்டில் நிலைத்திருப்பவராவர். (அல்குர்ஆன்: 33:36 இறைவாக்கின் சாரம்சம்)

மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியுமா?
உலகெங்கும், பரவலாய், பிளவுண்டு, சிதறிக்கிடக்கும் மனிதர்களை ஒன்றிணைத்து ஒரே சமுதாயமயமாக்கும் உயர் இலட்சியம், நீண்ட நெடுங்காலமாய் வெறும் கற்பனையான தோற்றமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மனித சக்திக்கு உட்பட்டு, மனிதர்கள் சாதிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது மனித சமுதாயம் முழுமையும் ஒன்றிணைப்பதே! அறிஞர் முதல் பாமரர் வரை இதில் அனைவரும் கருத்தொருமிக்கின்றனர்.

மொழி, இனம், நாடு, நிறம், பல்வேறுபட்ட தத்துவங்கள், அரசியல், பொருளாதாரம், ஆத்திக மதங்களால், நாத்திக சித்தாத்தந்தங்களால் ஏற்பட்டு வரும் வழிகேடுகள், விபரீதங்கள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க கேடுகள் போன்றவைகளால் கணக் கிலடங்கா பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கி நாளுக்கு நாள், எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அகில உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட மனித சமுதாய (மய)மாக்கும் சாத்தியக் கூறுகள் - வெற்றுக் கனவுகளே!

இது, சில காலம் முன்பு வரை அஞ்ஞானிகள் கண்ட தவறான முடிவு. ஆனால், இன்று, அல்ஹம்துலில்லாஹ், அந்த அவல நிலை மாறி அதற்குரிய சாத்தியக் கூறுகள் உண்டு. இஸ்லாம் மட்டுமே இதைச் சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடுடைய சமூக இயல் ஆய்வாளர்களும் உதயமாகி இருக்கிறார்கள். இந்த வியப்பிற்குரிய உண்மையை, ஜீரணிக்கு முன், இதை எடுத்துக் காட்டியவர், ஒரு முஸ்லிம் அல்ல என்பது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. (காண்க நூல்: இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். பக்கங்கள் 256 முதல் 269 வரை) ஆம்! இஸ்லாத்தை அதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியும் வேட்கையுடன், ஆய்வு செய்வோருக்கே இந்த பேருண்மை புலப்படும், பரம்பரை பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இது புலப்படாமல் போனதில் வியப்பில்லை.

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்: அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்-வ-அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு - என்ற இஸ்லாமிய கொள்கை முழக்கத்தோடு, இறைத் தூதர் (ஸல்) அவர்களின், இஸ்லாமிய அழைப்புப் பணித் துவங்கியது. இருபத்து மூன்றாம் ஆண்டு, ஹஜ்ஜத்துல் விதாவுவில், இஸ்லாம் நிறைவுற்றது (இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;.5:3) என்ற இனிய இறைவாக்கு அருளப்படும்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை, முஸ்லிம்களின் ஜமாஅத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இப்படிப்பட்ட உன்னதமான ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அடிகோலியது எது?

இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் 7:3, இறை வாக்கின் அடிப்படையில், இறையருளியதை மட்டுமே பின்பற்றி இந்த அற்புத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். அன்று பிரிவுக்கும், பிளவுக்கும் வித்திடும் அனைத்து வழிகேடுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டன. 3:103, இறைவாக்கின் அடியொற்றி, இஸ்லாமிய ஒற்றுமை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது.

முஸ்லிம்கள் ஒன்றுபடுவதையும், அதில் நிலைத்திருந்ததையும் 5:3 இறைவாக்கு இஸ்லாம் நிறைவுற்றது என்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த இறைவாக்கை மூச்சுக்கு முன்னூறு தடவை என்றல்ல, இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நிலை நாட்டுகிறோம் என் போர் பேச்சிலும், எழுத்திலும் முழங்கி வரும் நம்மவர்கள் - அதிலிருந்து படிப்பினை பெறத் தவறியது ஏன்?

இஸ்லாம் நிறைவு பெறும்போது (5:3) ஓரிறைக் கொள்கை - தவ்ஹீத் - முஸ்லிம்கள் அனைவர்களது வாழ்க்கை நடைமுறையால் பிரதிபலித்துக் காட்டப்பட்டதேயன்றி, தங்களைத் தனிமைப்படுத்திக் காட்ட பயன்படுத்தப் படவேயில்லை. தவ்ஹீத்வாதிகள் என்று யாரும் தங்களைத் தனிமைப்படுத்திக் காட்டவில்லை. தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று எதுவும் உருவாகவில்லை. பிற்காலத்தில் அப்படி உருவாக்கும் எந்த முகாந்திரத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. தவ்ஹீத் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதைத் தனிமைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை என்பதை அன்றைய உண்மை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தார்கள். கொள்கை சகோதரர்கள் இன்றைய வழிகேடர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திட தவ்ஹீதைப் பயன்படுத்துவது சரிதானா? தவ்ஹீதைப் பிரிவினைவாதத்துக்கும் பிளவுபடுவதற்கும் துணைக்கழைப்பது இஸ்லாத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.

தவ்ஹீத்வாதிகள் - நேர்வழி பெற்றவர்கள் உயர்ந்தவர்கள்
அனாச்சாரவாதிகள்- வழிகேடர்கள்-தாழ்ந்தவர்கள். இதை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுகிறோம் என்போர் எழுதவில்லை. பேசவில்லை. உண்மை, அவர்களின் நடைமுறை இதை மெய்ப்பிக்கிறது" விதிவிலக்கு வெகு சொற்பம்.

மனித சமுதாயத்தை ஒன்றிணைக்க அல்லாஹ்வால் அருளப்பட்ட ஓரிறைக் கொள்கை! இன்று நம்மவர்களால் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்க பயன்படுத்தப்படுகிறதென்றால்... இதைவிட, ஓரிறைக் கொள்கைக்கு இழைக்கப்படும் கொடுமை வேறெதுவும் இருக்க முடியுமா?

சம்பந்தப்பட்டவர்கள் ஆத்திரம் அடைய வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்து - தவறிலிருந்து விடுபட அன்போடு அழைக்கிறோம். மற்றப் பிரிவுப் பெயர்கள்: ஹனபி, ஷாஃபி என்றும் மத்ஹபுகள் பெயரால், தரீக்காக்கள் பெயரால், மன்றங்கள் பெயரால், ஜமாஅத்கள் பெயரால், அரசியல் கட்சிகள் பெயரால் இன்னும் எழுத்தில் வடிக்க இயலாத பிரிவிலும் பிளவிலும் சிக்கி, சிதறி, சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை,

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.7:3 இறையருளியதைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள் (3:103) இறை நெறிநூலோடு ஐக்கியமாகி ஒன்றுபட்ட உண்மை முஸ்லிம்களாக அழைப்பு விடுக்கும் மகத்தான சேவையில் ஈடுபட வேண்டிய நாம் தவ்ஹீத்வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம், ~ஜாக்ஹ், அஹ்ல ஹதீஃது, ஸலஃபி, இவையன்றி, அந்தந்த குழுக்கள் சரிகண்ட தனித்தனி பெயர்களில், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்கள், மன்றங்கள், அழைப்பு மையங்கள் என்று முன்னரே பல்வேறு பெயர்களில் பிளவுண்டோரை மீண்டும் பிரிக்காமல், முஸ்லிம்கள் என்று நம்மை நாமே தனிமைப்படுத்தி பிரிந்து செல்லாமல், முஸ்லிம்கள் என்ற நிலையில் உம்மத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைக்கும் தொலை நோக்கிற்கு - நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு அனைவரையும் கேட்டுக்கொண்டு, அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து இந்த ஆய்வை நிறைவு செய்கிறோம். வஸ்ஸலாம்.


நன்றி :/www.readislam.net/

ரமழானும் தர்மமும் எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி


- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.

ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.

“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).

எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).

மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.

பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).

மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).

ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள். எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.

ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.

உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.

தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

நன்றி;இஸ்லாம்கல்வி.காம்

Thursday, July 21, 2011

இஸ்லாத்தின் தனித்தன்மைகள் - Dr. Abdullah periyardasan




நன்றி:tamilmuslimtube.com

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி


- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28)

அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

இந்த உலகத்தில் பிறக்கின்ற வாழ்கின்ற எல்லா மக்களும் அல்லாஹ்வின் படைப்புகளே! பல இனத்தவர்களும் பல மொழி பேசும் மக்களும் பிரதேசத்தால் வேறு பட்டு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரை யும் படைத்தவன் அல்லாஹ்தான்.

அல்லாஹ்வின் உயர்ந்த படைப்பாகிய இந்த மனித சமூகத்திற்கு சத்திய வழியை நேரிய பாதையை காட்டுவதற்கு பல நபிமார் களை காலத்திற்கு காலம் அல்லாஹ் அனுப்பி வைத்து வேதங்களையும் இறக்கி வைத்தான்.

”மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற் செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான் (2:213).

எந்தவொரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி வைத்தோம் (14:4).

இவ்வாறாக வந்த அல்லாஹ்வின் தூதுத் துவம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே உரியதாக அமைப் பெற்றிருந்தது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரு கையோடுதான் இத்தூதுத்துவம் அகிலத் தாருக்குரிய தூதுத்துவமாக நிலைநிறுத்தப் பட்டது.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் மக்கத்து மக்களுக்குரிய அல்லது அரபு தீபகற்பத்துக்குரிய வேதமாக மட்டும் அருளாமல் முழு மனித சமுதாயத் திற்குரிய வேதமாக அருளினான். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குரிய இறுதி நபியாக அனுப்பி வைத்ததுடன் அல்குர்ஆனும் உலக பொதுமறையாக இறக்கப்பட்டது.

அல்குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் அருளப்பட்டது. ரமழானுடைய மகத்து வத்தை கூற வந்த அந்தக் குர்ஆனிய வசனத்தில்தான் உலக மக்களுக்கான நேர் வழி பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. பொது மறை என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித் தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள அல்குர் ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்….” (2:185).

ரமழான் மாதத்தின் சிறப்பு நோன்பு நோற்பதனால் ஏற்பட்டதல்ல. அல்குர்ஆன் ரமழானில் அருளப்பட்டதால்தான் சிறப்புக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற் கட்டும் என குர்ஆன் விளக்கப்படுத்துகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் ஒரேயொரு வழியை காட்டக் கூடிய நன்மை தீமையை பிரித்தறிவிக்கக் கூடிய உலக பொதுமறையான அல்குர் ஆன் அருளப்பட்டதாக இந்த ரமழான்அறிமுகப்படுத்தப்படுகிறது.

அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டு முரிய வேதமல்ல என்கிற செய்தி மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் இத்திருமறை வசனத்தில் கூறப்படுகிறது. ரமழானில் அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணித்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று பக்குவமுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் இச்செய்தி மிக முக்கியமானதாகும்.

தங்களுக்கு மட்டுமுரிய வேதமாகவும் மார்க்கமாகவும் இந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் வைத்துக் கொள்ளாமல் ஏனைய சமூகத்தவர்களுக்குரியதாகவும் எடுத்துக் காட்ட வேண்டிய பொறுப்பையும் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய 81:25-28 வசனம் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது.

உலகத்தார் யாவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறி விக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மத் நபியின்) மீது இறக்கியவன் (அல்லாஹ்) மிக்க பாக்கியமுடையவன். (25:1).

அலிப் லாம் றா, (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உம்மீது அருளி னோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்திற்கும் புகழுக்குரிய மிகைத்தவ னான அல்லாஹ்வின் பாதையின் பால் நீர் கொண்டு செல்வதற்காகவும் உம்மீது அருளினோம் (14:1).

இது மனித குலத்திற்கு சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவன் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டது) (14:52).

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வின் வேதம் முழு மனித சமூகத்திற்குமுரியது என்று விளக்கப்படுத்தப்படுகிறது. முஹம்மத் நபியின் மீது இவ்வேதத்தை இறக்கியருளும் போதே அம்மக்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின்பால் அழை த்து வருவதற்காகவே அருளப்படுவதாக அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

நபியே! நீர் கூறுவீராக! மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியது. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனே உயிர்ப் பிக்கிறான். அவனே மரணம் அடையும் படியும் செய்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் (7:159).

அல்லாஹ்வை கடவுளாக ஏற்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்று நேர்வழியின்பால் வாருங்கள் என்று தூதுத்துவத்தை உலக மக்களுக்குப் பிரகடனப்படுத்துமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு பொதுவாக அழைப்பு விடுத்தார்கள். அன்றைக்கு மக்கா மதீனாவை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் கூடுகின்ற இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள்.

இப்பணியினை நபிகளாருக்குப் பிறகு ஸஹாபாக்கள் செய்தார்கள். கலீபாக்கள் செய்தார்கள். இஸ்லாமிய தூது பரந்து சென்றது, வளர்ச்சி கண்டது.

இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் யார்? ஒரு சிலரை தவிர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். துரதிஷ்டவசமாக மாற்று மத நண்பர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி வந்து அவர்களுடைய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள் எத்தனை பேர்?

சகோதர சகோதரிகளே! முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொறுப்பை உணர்ந்து கொள்வோம். புனித ரமழானை இதற்காக பயன்படுத்துவோம். முடிந்தளவு இஸ்லாமிய மார்க்கத்தினை வாழ்க்கையில் கடைப் பிடித்து அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இஸ்லாத்தை புரியவைப்போம். அல்குர்ஆனையும் இறுதி தாதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும்அறிமுகப்படுத்துவோம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கக் கூடியதாக மார்க்கத்தை சரிவர கற்றுக் கொள்வோம்.

எத்திவைப்பதுதான் எமது பணி! நேர்வழி காட்டுவது (ஹிதாயத் கொடுப்பது) அல்லாஹ்வின் பணி!

நன்றி islamkalvi.com




Friday, July 1, 2011

விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்


எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

-K.L.M. இப்ராஹீம் மதனீ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இறைமொழியும் நபிமொழியும்
தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

நான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது, ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக்கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)

நீண்ட அறிவிப்பும் நிறைந்த நன்மைகளும்
புராக்கை என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது – அது நீளமான வெள்ளை நிறமுள்ளது, (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி வைக்கும் – பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள்; (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக்கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரஈல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள், நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.

ஆதி பிதாவும் ஆரம்ப வானமும்
பின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார்? எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரஈல் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா? என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டாம் வானமும் இறைதூதர் இருவரும்
பின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு இரண்டாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

மூன்றாம் வானமும் அழகு நபிச்சிகரமும்
பின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (மூன்றாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு மூன்றாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப் பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

நான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)
பின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (நான்காவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள் (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (நான்காம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)
பின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஐந்தாவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (ஐந்தாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஹாரூன் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஆறாம் வானத்தில் அருமை மூஸா (அலை)
பின்பு ஆறாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஆறாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. அப்போது எங்களுக்கு (ஆறாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே மூஸா (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஏழாம் வானத்தில் நபி இப்றாஹீம் (அலை)
பின்பு ஏழாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஏழாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். அப்போது எங்களுக்கு (ஏழாம்;) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும் அங்கே வருவதில்லை.

சீரழகுச் சூழலாய் சித்ரத்துல் முன்தஹா
பின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப்போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப்போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.

இறைத்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்
அல்லாஹ் எனக்கு வஹீ அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.

ஐம்பதிலிருந்து ஐந்து வரை
(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன், உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக்கடமையாக்கினான்? என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே! தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே! ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழ வேண்டும், ஒரு நேரத் தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)

நபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்கு ஒரு பெரும் அத்தாட்சி
விண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.

ஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஐ; என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஐ; என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.

1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)
2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)
3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)
4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)
5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)
6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)

இஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும்? இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.

மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.

ஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)

நஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.

காரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)

யார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில் :-
யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.
1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்;கம் செய்யப்பட வேண்டும்.
2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.

படிப்பினை தரும் தொழுகை
மிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போது வஹீ மூலமாக கடமையாக்கினான், ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்துக்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஜங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக…

صلى الله على سيدنا محمد و على آله وأصحابه و سلم، والحمد لله رب العالمين

நன்றி islamkalvi.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்