அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

இஸ்லாம்-பிறர் பார்வையில்

x
x
x

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்மீதும் உண்டாவதாக மரியாதைக்குரிய வாசகர்களே! இஸ்லாம் குறித்து உலகத்தின் பண்பாட்டுதலங்களை கலாச்சாரங்களை உலக வரலாறுகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துக்களை வரலாற்றின் பக்கங்களிலே பதிவு செய்து வைத்ததை நாம் இங்கே பிரசுரம் செய்து உள்ளோம் இதை நீங்களும் படித்துவிட்டு சகோதர சமுதாயத்தினரிடம் அறிமுகம் செய்துவைய்யுங்கள் இதன் மூலம் இஸ்லாம் குறித்து அவர்களிடம் இருக்கும் தவறான கருத்துக்களை கலைந்துக் கொள்வதற்கும் இஸ்லாத்தின் உண்மையான பக்கங்களின் மீது ஆய்வு செய்ய வேண்டும் இஸ்லாத்தை நாமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கருத்தியலை அவர்களுக்கு உள்ளே அது ஏற்படுத்தும் (இன்ஷா அல்லாஹ்) 
இந்த பகுதியை பற்றிய உங்களது கருத்துக்களை nkvl2010@gmail.com அல்லது mvazeem786@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் 
(முகம்மது சுல்தான்,நாச்சியார்கோவில்)





மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய 


சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார் :


உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, 


முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், 


வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற 


வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் 


ஒருவரே!


1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் 


குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு 


அப்படியே கிடைக்கின்றன. மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை 


அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் 


தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் 


யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் 


ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.











நன்றி:http://en.wordpress.com

நெல்லை கண்ணன்

nellai-kannan
உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே

 …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்

நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே

 …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்

 மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்

 …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்

  கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை

  …..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்


  படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்

  …..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை

  இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்

  …..எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்

  கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே

  …..கருணையில்லார் மட்டுமே கடையராவார்

  உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து

  …..உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்


  கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்

 ….. கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்

  பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்

  …..பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று

  கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி

  …..கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்

  படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்

  …..பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்


  நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு

  …..நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்

  அல்லாவை அவரளித்த தூதர் தம்மை

  …..ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை

  பொல்லாத அச் செயலால் புறக்கணித்து

  …..பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்

  அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா

  …..அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை


 கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி

 …..கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை

 நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்

 …..நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்

 வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்

 …..வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்

 அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்

 …..அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்  


எழுதியது நெல்லை கண்ணன்


   நபி பெருமான் சொன்ன பதில்



  இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று

  …..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்

  வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்

  …..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்

  இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்

  …..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்

  இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்

  …..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்


எழுதியது நெல்லை கண்ணன்


  (வேத வரிகளும் தூதர்மொழிகளும்)

  வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்

  138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12








January 26, 2009

cho
இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் நான் ஒரு முயற்சி செய்தேன். எங்கள் அலுவலகத்தில் இருக்கிற பரக்கத் அலி மூலமாக, ஒரு முஸ்லிம் அறிஞரிடம் இஸ்லாம் மதம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமாக எழுதித் தருமாறு, பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்டேன். அதை பரக்கத் அலி கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அது கொஞ்சம் கடினமாக இருப்பதால், அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் திரும்பவும் பேசி, எளிமைப் படுத்தி அதை பிரசுரிக்கத்தான் செய்வேன். ‘இஸ்லாமைப் புரிந்துக் கொள்வோம்’ என்ற அடிப்படையில் அந்தக் கட்டுரை வெளியிடப்படும். சோ, துக்ளக் (02.02.2005) இதழில்

January 26, 2009

thamizhanban
ஒட்டகங்கள்
தேசத்தில் பிறந்தார்.
ஒட்டாத அகங்களை எல்லாம்
ஒட்டி வைத்தார்.
அவரைப் பற்றி
எழுதும் இரவுகளில்
விளக்குகள்
ஏற்ற வேண்டியதில்லை
எழுத்துக்களிலேயே
பளிச்சென்று வெளிச்சம்!

(சென்னைத் தொலைக்காட்சியில் வழங்கிய மீலாத் கவியரங்கில்)

January 24, 2009

sir-cpramaswamy-iyer
இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். எனத் தொடரும் அவரது பேச்சில்
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை தென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை.

டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]

January 24, 2009

swami-vivekananda
மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் எனத் தொடரும் அவரது பேச்சில்
இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.

சுவாமி விவேகானந்தர் – [Letters of Swami Vivekananda P.463]

January 23, 2009

வில்லியம் மூர்
வில்லியம் மூர்
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
 வில்லியம்மூர்

January 23, 2009

கார்லைல்
கார்லைல்
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
 தாமஸ் கார்லைல் -

January 23, 2009



கிப்பன்
கிப்பன்
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
 கிப்பன் -

January 23, 2009







டால்ஸ்டாய்
டால்ஸ்டாய்

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
 டால்ஸ்டாய் -

January 23, 2009

washington-irving
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
 வாஷிங்டன் இர்விங் -

January 23, 2009



நேருஜி
நேருஜி
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
ஜவஹர்லால் நேரு -

January 23, 2009







நெப்போலியன்
நெப்போலியன்
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
 நெப்போலியன் -

பெர்னார்ட் ஷாவின் பார்வையில்

January 23, 2009

பெர்னார்ட் ஷா
பெர்னார்ட் ஷா
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன.  மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
 பெர்னாட்ஷா -

கவிக்குயில் கண்ட இஸ்லாம்

January 22, 2009

கவிக்குயில்
கவிக்குயில்
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது. அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.
எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.  
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது. அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.
உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான். ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.
மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
கவியரசி சரோஜினி நாயுடு -

அண்ணா கண்ட இஸ்லாம்

January 22, 2009

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

காந்திஜி கண்ட இஸ்லாம்

January 22, 2009


காந்திஜி
காந்திஜி


இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும்,செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.  

சிதம்பரம் கண்ட இஸ்லாம்

January 17, 2009

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும் நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார். த‌ம்முடைய‌ ‘ய‌ங் இந்தியா’ ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள். 
இஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌துவாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன். ந‌பிக‌ள் நாய‌க‌த்தின்மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும் அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.
இஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து. வாள் ப‌ல‌ம் கொண்டேஇஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்துகிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து. இஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்கொள்ள‌ வேண்டும்.
அண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து. ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம். முத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம். இது 13 ஆண்டுகள் நீடித்த‌து. இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம். இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து. ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும் சொல்லொணாத‌ கொடுமைக‌ளும், அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.
அன்றைய‌ அதிகார‌வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள். அவ‌ருடைய‌ பேச்சைக் கேட்கயாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள். முஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத் திட்டினார்கள். வ‌சை பாடினார்க‌ள்.  ஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பிஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌வ‌ர்க்க‌ம் ஏவி விட்ட‌து. முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.
ம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து.பிற‌குதொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம். த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து. அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம் ந‌டந்த‌து என்ப‌தே உண்மை.
பேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர், முக‌ம்ம‌தைப் பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம் இல‌க்கிய‌ விந்தைக‌ளாகி விட்ட‌ன என்று குறிப்பிடுகிறார். இஸ்லாம் ஏக‌த்துவ‌ம், ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து மூல‌க்கோட்பாடு. அவ‌னை ஒத்த‌தோ, விஞ்சிய‌தோ ஏதுமில்லை. அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌ குற்ற‌மும், குறையும் காண‌ முடியாது.
அவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை உண்டாக்கிய‌வ‌ன். அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம். உங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும், இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறுஉல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு.  இதுவே ம‌றுமை. இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்?  எல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். கால‌ப்போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌.
ம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌ மாறிவிடுகிற‌து. இந்து ச‌ம‌ய‌த்திலும், கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும், யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல் இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள். இந்த‌ தீவிர‌வாதிக‌ளினால்தான் ம‌த‌ங்க‌ளிடையேப‌கை வ‌ள‌ர்கிற‌து. இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை ம‌திப்பிட‌க்கூடாது.
திருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும், ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும் வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும். திருக்குர்ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610. ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து என்றால் அது திருக்குர்ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.
திருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர் மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.
( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந்து )
தகவல் : இனியவன் ஹாஜி முஹம்மது


சுஜாதாவின் பார்வையில்

March 10, 2008

sujaatha.jpg
தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…

“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். ‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’
‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)


நன்றி: திரு.ரவிபிரகாஷ்

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

January 19, 2008

kannadasan.jpg
பேரரசிரியர் மு. சாயபு மரைக்காயர்
“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.
“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”
அப்பாஸ் இப்ராஹீம்
“இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை”
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI
கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.
ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”

ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.
கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.
அரபி மூலம் – தமிழாக்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.

மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.

இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;

வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!

ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.

திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.
திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

* * *
உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”

- கண்ணதாசன்
எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.

கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்
சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.
திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.
“சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!”

(“கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 146)
கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.
“புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”

(“கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)
நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.

“நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்” என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,
“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”
என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!

கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
“மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!”
என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,
“எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!”
என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,
“எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!”
என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.

கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.
“எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!”
என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.

பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக…, கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.
நிறைவுரை
இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.
நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், “அல்ஃபாத்திஹா” எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் “திறப்பு” என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்
(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)
நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006
——————————————————————————–

அறிஞர் அண்ணா

January 19, 2008

 anna.jpg

வேண்டாம் அற்புதங்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக் கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. எனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டளையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
- அறிஞர் அண்ணா -
நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்




யுவான் ரிட்லி

January 9, 2010


தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…
“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?)

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.
புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ‘வாடகைக்கு’ என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் “பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே’ என்றும் “பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?’ என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் – அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! – அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்…. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் – இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்… முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: “பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்”. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.”
(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ‘In the Hands of Taliban: Her Extra ordinary Story’ என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ‘நியூஸ் வீக்’ பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)


நன்றி:http://vapuchi.wordpress.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்