அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, June 8, 2010

வெந்த புண்ணில் வேல்!


அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது போபால் நீதிமன்றம் யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பல ஆயிரம் பேர் இறந்த வழக்கில் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட,​​ அன்றைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா உள்ளிட்ட 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம்,​​ அவர்கள் பிணையில் செல்லவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதித்துள்ளது,​​ அதே நாளில் சிலமணி நேரங்களில் அவர்கள் ​ வீடு திரும்பினர்!

ஆவணங்களின் படி 3000-க்கும் அதிகமானோரும்,​​ ஆவணத்துக்குள் இடம்பெறாமலும் தொடர் விளைவாகவும் 25,000 பேரும் இறந்த இந்தச் சம்பவத்தில் நீதிகேட்டு சலித்துப் போய் காத்திருக்கும் மக்களுக்கு,​​ இந்தத் தீர்ப்பு மேலும் வலியைக் கூட்டுவதாக இருக்கிறது என்பதே உண்மை.​ ​

இந்தத் தீர்ப்பில் யாருக்கும் திருப்தி இல்லை.​ இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி,​​ "தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ​ என்று சொல்வதுதான் வழக்கம்.​ இது புதைக்கப்பட்ட நீதி' என்று கூறியிருக்கிறார்.​ இந்தத் தீர்ப்பு சரியானதல்ல என்று இத்தனை காலமாக நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிவரும் தன்னார்வ அமைப்புகளும் கூறியுள்ளன.​ மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளன.

இதற்காக போபால் நீதிமன்ற நீதிபதி மோகன் பி.​ திவாரியை குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.​ ஏனென்றால்,​​ அவர்​ முன் வைக்கப்படும் ஆதாரங்கள் அத்தகைய பலமில்லாத,​​ உறுதியில்லாத,​​ ஆதாரங்கள் இல்லாத அல்லது துடைத்தழிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே.​ மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த,​​ குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி யாராக இருந்தாலும் தீர்ப்பு இப்படியாகத்தான் இருந்திருக்கும்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பி.ஆர். லால் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் ​ தெரிவிக்கையில்,​​ தங்களை முழுமையாகச் செயல்பட அப்போதைய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.​ ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால்தான் இதைக் கூட இப்போது வாய் திறந்து சொல்கிறார்.​ அவரது துறையில் அவர் நியாயமானவராக இருந்திருந்தால்,​​ அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இந்த வழக்கில் மனப்புண்ணைக் கிளறிப் பார்க்கிற விஷயம் இந்தத் தீர்ப்பு அல்ல.​ இந்தத் தீர்ப்புக்குள் "அடங்க மறுக்கும்' அல்லது இந்திய அரசு "அடைக்க மறுக்கும்' அன்றைய கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும்,​​ பிணையில் வெளிவந்து இந்தியாவை விட்டுச் சென்ற ஆண்டர்சன் நியூயார்க்கில் வாழ்கிறார் என்று எல்லோரும் சொன்னபோதிலும் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும்தான்.
இந்தத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் யூனியன் கார்பைடு நிறுவனம் மிகத் தைரியமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.​ எங்களைக் குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.​ விபத்து நடந்த பின்னர்,​​ என்றைக்கு நாங்கள் இழப்பீட்டை சமரசத் திட்டத்துக்குப் பிறகு அளித்துவிட்டோமோ,​​ அப்போது எங்கள் பங்கு முடிந்துவிட்டது.​ அந்த நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காத அதிகாரிகள் மீதுதான் இப்போதைய வழக்கு என்று கூறியுள்ளது.​ ​
இந்த ஆலையில்,​​ டிசம்பர் 3,​ 1984-ம் ஆண்டு விபத்துக்கு முன்பாகவே நடந்த சிறுவிபத்துகள் குறித்து அமெரிக்க நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தி,​​ குறைகளைச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைச் சரிசெய்யவில்லை என்பதுதான் சிபிஐ தரப்பிலான ​ வழக்குரைஞரின் வாதம்.​ ​

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பணம் செலவழிக்க மறுத்து,​​ குறைகளைக் களைய தாமதம் செய்தால் அது யாருடைய குற்றம்?​ லாபம் மட்டுமே பார்க்க விரும்பும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் குற்றமா அல்லது அங்கு சம்பளத்துக்குப் பணியாற்றும் ஊழியர்களின் குற்றமா?
சாதாரணமாக ஒரு கட்டடம் இடிந்து விழுந்து சிலர் இறந்துபோனாலும்கூட,​​ கட்டடம் கட்டும் கான்ட்ராக்டரை கைது செய்வார்களா அல்லது மேஸ்திரி,​​ சித்தாள்களைக் ​ கைது செய்வார்களா?​ என்பது நமக்குத் தெரிந்த நியாயங்கள்;​ சட்டம்தான் இருட்டறையாயிற்றே.​ அங்கே இந்த நியாயங்கள் எப்படி எடுபடும்?​ அப்படியே எடுபட்டாலும்,​​ எடுபடாமல் போவதற்கு உப்புச் சப்பில்லாத,​​ நீதியைத் திசைதிருப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே...

செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தியாவை விட்டுத் தப்பிப்போன வாரன் ஆண்டர்சன்னை பிடித்துவந்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.​ ​ இந்நிலையில் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?​ ஆண்டர்சன் விவகாரத்தில் எப்படி நடந்துகொள்கிறதோ அதைப்போலவேதான் ஹெட்லி விஷயத்திலும்,​​ இந்திய அரசு நடந்துகொள்ளப் போகிறது.​ ​

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.​ ஆனால் இப்போதெல்லாம் அதற்கு ரொம்ப நாளாகிறது.​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு -​ வெந்த புண்ணில் வேல்!
நன்றி: துபாய் மைதீன்.
நன்றி:http://makkalnesan.blogspot.com/

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்