|
முஸ்லிம் தனது பெற்றோருடன்
உபகாரியாக இருப்பார்
உண்மை முஸ்லிமின் தலையாயப் பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வதும் ஒன்றாகும். இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய உறவுடனும் நடந்துகொள்ள வலியுறுத்துகின்றன.அவர்களது அந்தஸ்தையும், அவர்களுக்கான கடமையையும் அறிவார்
வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை ஈமான் கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் திருப்திக்குப் பிறகு பெற்றோரின் பொருத்தத்தை இணைத்து திருக்குர்அனின் பல வசனங்கள் காணக்கிடைக்கின்றன.அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்அன் 4:36)
உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. பெற்றோரின் மாண்புகளைத் தெளிவுபடுத்தி பெற்றோரின் விஷயத்தில் முஸ்லிம் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை திருக்குர்அன் விவரிக்கிறது. அவர்களில் இருவரோ அல்லது இருவருமோ இருந்து, வயோதிகத்தின் பலவீனத்திற்கு இலக்காகி இருந்தால் அவர்களுக்கு மனிதகுலம் கண்டிராத கெªரவத்தை இஸ்லாம் வழங்குகிறது.
(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)
இவ்வசனம் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனின் உறுதியான கட்டளையாகும்.
"உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றொருவரையும்) வணங்கக் கூடாதென்றும் தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியும் கட்டளை யிட்டிருக்கிறான்'' என்பது திருமறையின் கூற்றாகும்.இதில் அல்லாஹ்வை வணங்குவது மற்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்குமிடையே உறுதியான தொடர்பு அமைக்கப்பட்டுள்ளது. மனிதப் பண்புகளை ஆய்வு செய்பவர்கள், சீர்திருத்தவாதிகள், மேதைகள் ஆகியோரின் சிந்தனைக்கு எட்டாத அளவு இதில் பெற்றோரின் அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திருவசனத்தின் உள்ளார்ந்த கருத்தைக் கவனிக்கும்போது பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்ற உயரிய நோக்கம் மட்டும் வெளிப்படவில்லை. மாறாக அன்பு, நேசம், உபகாரம் போன்ற செயல்களின் உள்ளுணர்வை மக்களின் இதயங்களில் ஊடுருவச் செய்து, தங்களது பெற்றோரின் மீது கருணை மழையை பொழியவும் தூண்டுகிறது.
"அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடமிருந்து, முதுமையை அடைந்துவிட்ட போதிலும்''
இந்த திருவசனத்தில் உள்ள "உம்மிடமிருந்து' என்ற வார்த்தையின் பொருள் உமது பாதுகாப்பில், உமது அரவணைப்பில், உமது பராமரிப்பில் என்பதாகும்."அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம்'' என்ற வசனம், இருவரும் முதுமையடைந்து பலவீனமடைந்துவிட்டால் அவர்களிடம் நிந்தனையான மனநெருக்கடியை எற்படுத்தும் எந்தவொரு வார்த்தையையும் எந்த நிலையிலும் கூறிவிடாதே. அவர்களது உள்ளமும் கண்களும் குளிரும்படியான நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
"அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) புஜம் தாழ்த்தி மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக'' என்ற வசனம் அவர்களுக்கு முன்பாக நிற்கும் போது மரியாதையுடனும், பணிவுடனும், தாழ்வுடனும் நிற்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அவர்கள் உனக்குச் செய்த உபகாரங்களையும் நீ குழந்தைப் பருவத்தில் பலவீனமாக இருந்தபோது அவர்கள் பரிபாலித்து வளர்த்ததையும் நினைவில் வைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை பின்வரும் வசனம் சுட்டிக்காட்டுகிறது."நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, போஷித்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக.''
பரந்த மனமும் பிரகாசிக்கும் அறிவாற்றலும் கொண்ட முஸ்லிம் அல்லாஹ்வின் இவ்வாறான அழகிய கட்டளைகளை பல திருவசனங்களில் அதிகமதிகம் கற்று தனது பெற்றோருக்கு அதிக கண்ணியமும் உபகாரமும் செய்பவராக இருப்பார்.
அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்..... (அல்குர்அன் 4:36)
தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)
தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்அன் 31:14)
பெற்றோருக்கு உபகாரம் செய்வதைப்பற்றி வந்துள்ள இரங்களை சிந்திப்பவர் இறைவசனங்களைத் தொடர்ந்து பல நபிமொழிகளையும் காணமுடியும். அவர்களுக்கு உபகாரம் செய்யத் தூண்டியும் எக்காரணமாக இருப்பினும் நோவினையையும் மாறுசெய்வதையும் தவிர்க்குமாறு அவை வலியுறுத்துகின்றன.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "(ஜிஹாது) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை, தொழுகை மற்றும் இறைவழியில் போரிடுவது என்ற இரு மகத்தான கடமைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டார்கள். தொழுகை மார்க்கத்தின் தூணாகும். "ஜிஹ்ாது' இஸ்லாமின் பெருமைமிகு அமலாகும்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதை இவ்விரண்டிற்கும் இடையில் கூறியதிலிருந்து அதற்கு எத்தகு உயரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!
ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு "பைஅத்' (வாக்குபிரமானம்) செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கி அவரிடத்தில் ""உமது பெற்றோரில் எவரேனும் இருவர் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்! இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் ""உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)நபி (ஸல்) அவர்கள் போருக்காக படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் வாளெடுத்து போர்புரியும் வீரர் தேவையென்றிருந்தும் தமது மென்மையான இதயத்தில் பெற்றோரின் பலவீனமும் மகனிடம் அவர்கள் தேவைப்படுவதையும் நினைக்கத் தவறவில்லை. நஃபிலான ஜிஹாதைவிட பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு முன்னுரிமை அளித்தார்கள். மனிதனின் வெற்றிக்காக அல்லாஹ் அமைத்துள்ள நடுநிலையான இஸ்லாமின் நெறிகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு அவருக்கு உபதேசித்தார்கள்.
ஸஓது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் இஸ்லாமை தழுவியதை அவர்களது தாயார் ஏற்க மறுத்து "நீ இஸ்லாமைவிட்டு விலகி வரவேண்டும். இல்லையென்றால் நான் மரணிக்கும்வரை உணவருந்த மாட்டேன்; தாயைக் கொன்றவன் என்ற அரபிகளின் அவச்சொல்லுக்கும் கோபத்துக்கும் நீ இலக்காகுவாய்'' என்று கூறினார். அவருக்கு ஸஓது (ரழி) அவர்கள் "அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது அணையாக! உமக்கு நூறு உயிர்கள் இருந்து அது ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் (நூறுமுறை மரணமடைந்தாலும்) எனது மார்க்கத்திலிருந்து விலகமாட்டேன்'' என்று பதிலளித்தார். தாய் ஒரிரு தினங்களாக சாப்பிடாமல் இருந்துவிட்டு மூன்றாவது நாள் பசியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உணவருந்தி விட்டார். அப்போது இரு திருவசனத்தை இறக்கி அதை முஸ்லிம்களுக்கு ஒதிக்காட்டுமாறு தனது தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அதில் ஸஓது (ரழி) அவர்கள் தனது தாயிடம் கடுமையான முறையில் பதிலளித்ததைக் கண்டித்திருந்தான்.
எனினும் (இறைவன் என்று) நீ அறியாததை, எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் (நன்மையான காரியங்களில்) நீ அவ்விருவருடனும் அன்புடன் ஒத்துவாழ்.... (அல்குர்அன் 31:15)
ஜுரைஜ் என்ற வணக்கசாலியின் சம்பவத்தில் பெற்றோருக்கு வழிப்படுவதன் முக்கியத்துவம் குறித்த அற்புதமான படிப்பினை உண்டு. ஒரு நாள் ஜுரைஜ் தொழுது கொண்டிருக்கும்போது அவரது தாயார் அழைத்தார். ஜுரைஜ் "இறைவனே! எனது தாயா? எனது தொழுகையா?' என்று எண்ணிவிட்டுத் தொழுகையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவதாக அழைத்தபோதும் பதிலளிக்காமல் தொழுது கொண்டிருந்தார். மூன்றாவதாக அழைத்தபோதும் அவர் பதிலளிக்காததால் அவரது தாய் அவர்மீது கோபமாக "விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யாதிருக்கட்டும்'' என்று சாபமிட்டுவிட்டார்.
சில காலங்களுக்குப் பின் ஒருபெண், ஆட்டிடையன் ஒருவனுடன் விபச்சாரம் செய்து கர்ப்பமடைந்தாள். தனது தவறு வெளியாகி விடுமென்று அவள் அஞ்சியபோது அந்த ஆட்டிடையன் அவளிடம் ""உன்னிடம் எவரேனும் குழந்தைக்குத் தந்தை யாரென்று கேட்டால், வணக்கசாலியான ஜுரைஜ் என்று கூறிவிடு'' என்றான். அவளும் அவ்வாறே கூறிவிட்டாள். இதையறிந்த மக்கள் ஜுரைஜின் வணக்கஸ்தலத்தை உடைத்தெரிந்தனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்து தண்டனை நிறைவேற்றப்படும் மைதானத்திற்கு இழுத்து வந்தனர். வரும் வழியில் தனது தாயின் துஆ நினைவுக்கு வந்து அவர் சிரித்தார். தண்டனைக்காகத் தயாரானபோது இரண்டு ரக்அத்துகள் தொழ அனுமதி கேட்டார்.
பின்பு அந்தக் குழந்தையை வாங்கி காதின் அருகில் மெதுவாக ""உன் தந்தை யார்?'' என்று கேட்டார். குழந்தை "எனது தந்தை இன்ன ஆட்டிடையன்'' என்று கூறியது. உடனே கூடியிருந்த மக்கள் தக்பீர், தஹ்லீல் கூறி "நாங்கள் உங்களது வணக்கஸ்தலத்தை தங்கத்தாலும் வெள்ளியாலும், கட்டித் தருகிறோம்'' என்றார்கள். அவர் "வேண்டாம்! முன் போலவே மண்ணால் அமைத்துக்கொடுங்கள்'' என்று கூறிவிட்டார்.
நபி (ஸல்) அவர்கள் "ஜுரைஜ் மார்க்கத்தை விளங்கியவராக இருந்திருந்தால் தொழுகையை நீண்ட நேரம் தொடர்வதைவிட தாய்க்கு பதிலளிப்பது அவசியம் என்பதை அறிந்திருப்பார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் நஃபில் (உபரியாக) தொழும்போது பெற்றோர்களில் இருவர் அழைத்தால் தொழுகையை முறித்துவிட்டு அவர்களது அழைப்பை ஏற்கவேண்டும்.
முஸ்லிம்களாக இல்லையெனினும் அவ்விருவருக்கும் உபகாரம் செய்வார்
நபி (ஸல்) தனது சங்கைமிக்க நல்லுபதேசங்களால் மனித நேயத்தின் உச்சநிலையை சுட்டிக்காட்டினார்கள். அதாவது பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் அவர்களுடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்துகொள்ள உபதேசித்துள்ளார்கள்.அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை இருமுறை என்னிடம் வந்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் சென்று "எனது தாய் மிக ஆவலுடன் (உதவி கேட்டு) என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா?'' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்)
திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் இவ்வாறான கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளும் முஸ்லிம் அல்லாஹ்வின் படைப்புகளில் உபகாரத்திற்கு பெற்றோர்களே மிகத் தகுதியானவர்கள் என்பதைக் கண்டுகொள்வார். அவர்களுடன் அழகிய முறையிலான உறவை அனைத்து நிலைகளிலும் அனைத்துக் காலங்களிலும் பேணவேண்டும். இதுதான் நபித்தோழர்கள் மற்றும் நன்மையால் அவர்களைப் பின்பற்றிய சான்றோர்களின் நடைமுறையாகும்.
இருவர் ஸயீது இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் "நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன். ஆனால், அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின் பொருள் மட்டும் விளங்கவில்லை'' என்றார். ஸயீது (ரஹ்) அவருக்கு "அவ்விருவருடன் உரையாடும்போது இரு அடிமை தனது எஜமானரிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும்'' என்று விளக்கமளித்தார்கள்.
இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் இரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.
அவர்களை நோவினை செய்வதுபற்றி அச்சம் கொண்டிருப்பார்
பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய ஆர்வமூட்டும் தெளிவான ஆதாரங்களை நாம் கண்டுணர்ந்தபின், வரும் பக்கங்களில் அவர்களை நோவினை செய்வது பற்றிய எச்சரிக்கைகளைக் காண்போம்! அதைப் படிக்கும்போதே பெற்றோரை நோவினை செய்யும் கடினசித்தம் கொண்ட பிள்ளைகளின் இதயம் திடுக்கிடவேண்டும். அவர்களது மனம் அஞ்சி நடுங்கவேண்டும்.பெற்றோருக்கு உபகாரம் செய்வதும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் இணைத்துக் கூறப்பட்டதுபோல, பெற்றோருக்கு நோவினையளிப்பதை அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுடன் சேர்க்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியதாகும். அது உண்மை முஸ்லிமின் இதயத்தை திடுக்கிடச் செய்யும் கொடூரமான தீமையாகும். அதை சரி செய்துகொள்ள இதயம் துடிக்கும். ஏனெனில், அது பாவம் மற்றும் குற்றங்களில் மிகக் கொடூரமானதாகும்.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள். நாங்கள் "அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நன்றி:http://www.readislam.net
No comments:
Post a Comment