அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, December 21, 2010

இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்!

தற்போதைய இளைஞர்களின் சீரழிவுக்குக் காரணம் புகைப்பழக்கம், பான்பராக், ஹான்ஸ், மது, செல்போன். இவை தவிர சினிமா மற்றும் தொலைக்காட்சி ஆகியவைதான். தமிழக கலாசாரத்தைச் சீரழித்து மாற்றுகிற மிகப்பெரும் சக்தியாக இவை திகழ்கின்றன. காலம் மாறுகிறபோது கலாசாரத்தையும் மாற்றுகின்ற மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர். மேலும் இதில் வேதனைக்குரிய தகவல் என்னவென்றால் ஹான்ஸ் என்ற புகையிலையை மாணவர்கள் கண் முன்னே சில ஆசிரியர்கள் பயன்படுத்துவதுதான்.இது வேதனைக்குரியது. இதைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சிக்க வேண்டும். சிகரெட் பாக்கெட்டிலும், மது புட்டியிலும் மண்டைஓடு படம் போட்டால் மட்டும் போதாது. முற்றிலுமாக போதைப்பொருள்களை ஒழிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த கலாசாரம் தொடர்ந்தால் வரும் காலத்தில் மது குடிப்பது ஒரு டீ டைம் போல் ஆகிவிடும்.மது நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு என்ற வாசகம் பாட்டிலில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதை எவரும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்த, பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்குத் தடைச் சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. இதற்கு அரசு அதிகாரிகளே காரணம். ஏன் என்றால் அவர்களே பொது இடத்தில் சிகரெட் பிடிக்கின்றனர்.பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுஇடங்களில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதைத் தடுக்கும் அதிகாரிகளும் முனைப்பாகச் செயல்படவில்லை. அப்படி சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டு 200 அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அவரிடம் அந்த அளவுக்கு ரூபாய் இல்லை என்றால் அபராதம் விதிக்காமல் 30 அல்லது 50ஐ பிடுங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர். இதனால் ஒரு சமுதாயத்தைத் திருத்திவிட முடியும் என்ற கருத்து தவறானது. தற்போதுள்ள இளைஞர்கள் எதை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதை அரசு கவனிக்க வேண்டும். அவர்கள் செல்வது நிச்சயம் அழிவுப்பாதையை நோக்கி என்று தெரிந்தால், அதைத் தடுக்க அரசு முயற்சிக்க வேண்டும். முதலில் சிகரெட், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு கடும் தடைவிதிக்க வேண்டும். பள்ளி கல்லூரி அருகே நிச்சயமாக கடை இருக்கக் கூடாது. இதையடுத்து, இவற்றைத் தயார் செய்யும் நிறுவனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்.செல்போனில் பரவிவரும் ஆபாசப் படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் எடுத்துவர தடை விதிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை நல்வழிபாதைக்கு அழைத்துச் செல்லும் அக்கறை உள்ள அரசாக அரசு செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி நாளிதழ்

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்