அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Saturday, June 5, 2010

ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்!




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக

இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் ஊடகத்துறையில் முஸ்லீம்கள் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கின்றார்கள், ஊடகத்துறையில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ன, ஊடகத்துறையில் நாம் ஏன் கால்பதிக்கவேண்டும், இதன் அவசியம் என்ன, ஊடகத்துறையில் நமது பங்களிப்பை எப்படி செய்வது போன்ற விவரங்களை இந்த கட்டூரை தெளிவாக அலசுகின்றது தயவு செய்து இதை படிக்கும் வாசகர்கள் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் இந்த கட்டூரை http://masdooka.wordpress.com/ என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இதுபோன்ற கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் படித்தவிசயங்களில் தங்களுக்கு ஏற்ப்பட்ட தாக்கம் தங்களுடைய கருத்து என்று ஊடகங்கள் மூலம் பதிவு செய்யக்கூடியவர்களாக இருந்தால், தங்களது நண்பர்களையும் தெரிந்தவர்களையும் இந்த ஊடகத்துறையில் கால்பதிக்க ஆர்வமூட்டினால் சமூகத்தின் உண்மையான பக்கங்களை பதிவு செய்யவும், இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்களை களைவதற்கும் இன்ஷா அல்லாஹ் இது வாய்ப்பாக அமையும்.


இனி கட்டுரையை வாசிப்போம் வாருங்கள்


(முகம்மது சுல்தான்,நாச்சியார்கோவில்)




ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்!

“

“எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்“

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.

“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!” என்கிறார் இவர்.

ஒரு பிரபல மேற்கத்திய செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாகியின் இக்கூற்றினைச்சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன.

இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் உண்மைக்குப் புறம்பான அத்தகைய செய்திகளின் முகமூடிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழிந்து விடுவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சில அறிவுஜீவி(!) எழுத்தாளர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊடகங்களிலிருந்து அகற்றினால் மட்டுமே நடுநிலைப் பத்திரிகை எனும் பெயரினைத் தக்க வைக்க இயலும் என்ற நிலைக்கு மேற்கத்திய ஊடகங்களே தள்ளப்பட்டுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டே வருகிறது.

ஊடகங்களின் அவசியம்

நவீன உலகில் ஊடகத்துறையின் முக்கியத்துவத்தினையும் அதில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

உலகின் சமாதான சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள இறை மார்க்கம் இஸ்லாமும் அது கூறும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களும் உலகிற்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு நேர்மாறாக, உலக சமாதானத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இன்றைய நிலைக்கு மூலக் காரணம் ஊடகங்களே.

உலகளாவிய அளவிலிருந்து இந்தியச் சூழல் வரை முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் நியாயம் அநியாயமாகவும் அரச, பாஸிஸ, பயங்கரவாதச் செயல்கள் நியாயங்களாகவும் திரித்து மக்கள் மனதில் திணிக்கப்பட்டதற்கும் ஊடகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தென்காசியிலிருந்து மகாராஷ்டிரா நான்டெட் வரை, வெடிகுண்டுகள் நிர்மாணிப்பதிலும் அதனை வெடிக்க வைப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கபரிவாரங்கள் தான் காரணம் என்பதைக் காவல்துறை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னரும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அரசு இயந்திரங்கள் செயல்படுதவற்கும் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சங்கபரிவாரம் போன்ற பாஸிஸ சக்திகள் சுதந்திரமாக உலாவருவதற்கும் அவைகள் செய்யும் அக்கிரமங்கள் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீது கட்டிவைக்கப்பட்டுத் தடை செய்யப்படுவதற்கும் காரணம் ஊடகங்களே.

உலகில் வலிமை குறைந்த நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் தகர்க்கப்படும் பொழுதும் உலகம் கைகட்டி அதனை நியாயப்படுத்திக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் இவ்வூடகங்களின் பொய் பிரச்சாரங்களே காரணம்.

உலகை ஒரே செய்தியின் மூலம் தலைகீழாக மாற்றிப்போடும் அதி சக்தி வாய்ந்த இந்த ஊடக ஆயுதத்தை, பாஸிஸ, ஏகதிபத்தியச் சக்திகள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதும் இத்துறையின் சக்தியை முஸ்லிம்கள் சரிவர புரிந்துக் கொள்ளாமல் பாராமுகமாக இருந்ததுமே இவற்றிற்கான மூலக் காரணமாகும்.

காலம் தாழ்ந்தெனினும்துவங்கி சில வருடங்களிலேயே உலக மக்கள் மனதை கொள்ளை கொண்டு விட்ட அல் ஜஸீரா, ப்ரஸ் டிவி போன்ற முஸ்லிம்களின் ஊடக கால்வைப்பு, உலகில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி அமைத்துள்ளது என்பதற்கான ஆதாரமே இந்தப் பிரபல மேற்கத்திய ஊடகத் தலைமை நிர்வாகியின் கூற்று வெளிப்படுத்துகின்றது.

சரி… மேற்கத்திய ஊடகங்களே முன்வந்து முஸ்லிம் செய்தியாளர்கள் அதிகமாகத் தேவைப்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ள இச்சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

சக்தி வாய்ந்த அரசு இயந்திரங்களான இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், உளவுத்துறை போன்றவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது போன்றே ஊடகத்துறையிலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையை முதலில் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும்.


பிரச்னைகள் ஏற்படும் வேளைகளில் மட்டும் அதனைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறையைத் தேடுவதை விட, முழு பிரச்னைகளுக்குமான மூல காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு முயல்வதே அறிவுடைமையாகும்.

அவ்வகையில் இன்றைய நவீன உலகில், ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமின்றி வலிமை குன்றிய, பலவீனர்கள் மீது பிரயோகிக்கப் படும் அநியாயங்களுக்கு மூலக்காரணம் அதி சக்தி வாய்ந்த ஊடகத்துறையில் நியாயவான்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவில் இல்லாமையே என்ற யதார்த்ததினை மனதில் நிறுத்த வேண்டும்.

இதனைச் சீர் செய்து விட்டால், பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்துச் சீர்செய்ததற்கு ஒப்பானதாகும்.

அவ்வகையில், கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை மக்கள் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டி மக்களை அநியாயங்களுக்கு எதிராகப் போராடவும் வைப்பதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் முன்வர வேண்டும்.

எவ்வாறு சமுதாயத்தின் உயர்வுக்குக் கல்வியில் தன்னிறைவு பெறுவது கட்டாயமோ, அதனை விடக் கட்டாயமானது ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதாகும். சமுதாய, சமூகங்களின் சுமூகமான, சமாதானமான வாழ்விற்கு முஸ்லிம்கள் ஊடகத்துறையில் கால்பதிப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.

பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் மாணவனின் எதிர்கால வாழ்க்கை (?) பிரகாசமாயிருக்க மருத்துவம், IT அல்லது Oil/Gasதுறைகளே கதி என்று போதிக்கப்பட்டுவரும் தற்போதையச் சூழல் மாறி, தாம் செய்யும் பணிகளில் நிறைவைப் பெற்றுத் தரும்,அசத்தியத்தை வெருண்டோடச் செய்து சத்தியத்தை நிலைநாட்டும் ஆக்கப்பூர்வமான, அத்தியாவசியமான ஊடகத்துறை பணிகளில் இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க முன்வர வேண்டும்.

அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள 3.5 சதவீதம் இடஒதுக்கீடைத் தனியார் துறைகளிலும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக ஊடகங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இருக்கும் வறட்சியைப் போக்க உடனடியாக வழிவகைக் காணப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

சரி… ஒரு சிறந்த பத்திரிகையாளராக (எழுத்தாளர்) ஆவதற்கு என்ன செய்யவேண்டும்?

இந்தியாவின் சிறந்த பத்திரிகை ஆசிரியர் எனப் பெயர் பெற்ற குஷ்வந்த் சிங் கூறுகிறார்:

“ஒரு புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்பினால், அத்தலைப்பின்கீழ் குறைந்தது 400 வார்த்தைகளைத் தினந்தோறும் எழுதி வாருங்கள். சில மாதங்களில் நீங்கள் விரும்பிய புத்தகம் தயாராகி விடும்“.

சரி என்ன எழுதுவது? எப்படி எழுதுவது என்ற தயக்கம் ஏற்படுகிறதா? அதைக் களைவதற்கும் வழி இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனைப் பார்க்கலாம். இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும்“மது போதை (Alcoholism)” பற்றிய ஒரு சிறிய தேடலை இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுள் மூலம் தேடுங்கள்.

உங்கள் ஆய்வுகளைத் தேடுங்கள்

தேடுங்கள்… எழுத வரும்!

மதுவினால் விளையும் தீமைகளையும்

மது அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம் தேவையா?

தேடுங்கள் கிடைக்கும்.

மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடுகள், உண்மைச் சம்பவங்கள், துயர வாக்குமூலங்கள்?

தேடுங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இன்றைய நவீன உலகில், துல்லியமான முழு அறிக்கைகளுடன் அமைந்த ஆய்வுக்கட்டுரைகளையும் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் சொல்வது மிக எளிது.

அனைவரும் இந்தியப் பிரச்னைகளுக்கு மூல காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான்(!) என்று ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்புகையில், மக்கள் தொகை மளமளவெனப் பெருகும் இந்தியாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கட்டுரை எழுதுங்கள். மக்கள் தொகை பெருகப்பெருக வளர்ந்து கொண்டிருக்கும் மனித வளமும் நுட்பமும் சர்வதேச உலகில் சரித்திரம் படைத்துவரும் இந்தியாவின் சாதனைகள் பற்றிப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் ஏன் குடும்பக் கட்டுப் பாட்டினை எதிர்க்கிறது என்பதனைப் பாமரருக்கும் புரியவையுங்கள்.

குடும்பக் கட்டுப்பாட்டினைக் கையாள ஆரம்பித்ததனால் சீனாவில் இளையவர்கள் குறைந்து முதியவர்கள் பெருகி நாடு அடையும் துன்பங்கள் பற்றியும் எழுதுங்கள். அனைத்தையும் அசைக்க இயலா ஆதாரத்துடனும் உறுதியுடனுடன் எழுதுங்கள்;எழுதிக்கொண்டே இருங்கள்.

நம்மைச் சுற்றி தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் பலப் பல. அவற்றில் நடக்கும்அசத்தியங்கள், அநீதிகள், அக்கிரமங்கள் எத்தனை எத்தனை? அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் இஸ்லாமிய வழிமுறைகளைக் காண்பியுங்கள்.

இளைய தலைமுறையினரைச் சீரழிப்பதில் ஊடங்களின் பங்கு எத்தனை எத்தனை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுங்கள்.

இளமையில் கர்ப்பம் தரிப்பதையும், கலைப்பதையும் கூட நாகரீகமெனக் காட்டும் சூழல்களைத் தீயிட்டுப் பொசுக்குங்கள்.

மனிதம் மறந்து மதவெறியினைத் தூண்டும் தீய சக்திகளின் செயல்களை வெட்ட வெளிச்சமாக்குங்கள்.

அவ்வளவு ஏன்? இக்கட்டுரையை வாசிக்கும் பல அன்பர்கள் வார்த்தைகளைக் கோர்த்து எழுதத் தெரியாதவர்களாக இருக்கலாம்.

ஆனால் சிந்தனை எனும் சக்தி நம் அனைவருக்கும் இருக்கிறதே!

எனவே சிந்தியுங்கள். உங்கள் உலகம் என்பது காலைக் கண்விழிப்பதிலிருந்து இரவு கண் மூடி நித்திரையில் ஆளும் வரைதான். உங்கள் உலகில் சஞ்சரிக்கையில் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் இதற்குக் கூறும் தீர்வு என்ன என்பதைக் கலந்து ஆலோசியுங்கள். தேடுங்கள். குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எழுதுங்கள்.

கணினி யுகத்தில் வசிக்கிறீர்கள் என்பதை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். சொந்தமாகக் கணனியும் இணைய இணைப்பையும் இயன்றால் வலைப்பதிவையும் துவக்குங்கள். இயன்றவரையில் பத்திரிகைத் துறைக்கு வர இளையவர்களைத் தூண்டுங்கள்.

இன்றைய உலகம் – இது தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் களம்.

இயன்றவரை நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதன் துவக்கம் இதுநாள் வரை முஸ்லிம் சமூகம் தம் குடும்பச் சொத்தாக எண்ணி வந்த இஸ்லாமாக இருக்கட்டும். மனிதனைப் படைத்த இறைவன் அளித்த நெறி மனங்களை வெல்ல வல்லவை.

“மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு சந்தைப் படுத்தப்படும் பொருட்கள் கூட படுவீழ்ச்சி அடைகின்றன. மிகப் பிரபலமான எதிர்காலத்தைத் தரும் என்று கணிக்கப்படும் துறைகளும் குறைகளைச் சந்திக்கும். ஏனெனில் அவை சரியான முறையில், சரியான விதத்தில், மக்களைச் சென்றடைவதில்லை!” என்பதே வியாபார ரீதியிலான நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேச நிபுணர்களின் தத்துவம்.

இங்குக் கருவாகக் கொண்டிருக்கும் இஸ்லாம்கூட அத்தகைய ஒரு பேசுபொருள்தான். மிகுந்த தரம் கொண்ட ஒரு வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களேஅந்த உயரிய நெறியை உலகிற்குப் பறை சாற்றுவதில் ஏனோ மிகவும் பின் தங்கியுள்ளனர்.

இஸ்லாமிய நெறிகளை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதில் சிறந்ததாகக் கருதப்படுவது அழகிய விவாதத்தினை ஏற்படுத்தி ஐயங்களைக் களைவதேயாகும். இதன் மூலம் இஸ்லாம் பற்றி பிற மதத்தினர் மனதில் பொதிந்துள்ள பாரதூரமான விஷயங்களைப் பேசி விளக்கங்கள் கொடுக்கலாம். ஓர் அப்பாவி அமெரிக்கருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ இஸ்லாம் என்றால் “அச்சுறுத்தக் கூடியது” என்றுதான் தொடர்ச்சியாகப் போதிக்கப்படுகிறது என்ற உண்மை நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எளிதில் மனங்களை வெல்லக் கூடியது. சர்ச்சைகள்எழுப்பக்கூடிய தலைப்புகளில்கூட கீழ்க்கண்ட படித்தரங்களில் ஓர் அழகிய விவாதக் களத்தை அமைத்தால் எளிமையானதாக இருக்கும். அதாவது,

இஸ்லாம் என்பது,

- உணர்வுப் பூர்வமானது (Emotional)

- வாழ்வில் நன்னெறியினைப் புகுத்தக்கூடியது (Ethical)

- தர்க்க ரீதியிலானது மற்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது (Logical)

பிரச்னை என்பது மனங்களிலும் இல்லை. நெறிகளிலும் இல்லை. சென்று சேர்வதில் மட்டுமே உள்ளது. ஆகவே, சத்தியங்களையும் நியாயங்களையும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு உதவியாக எழுத ஆரம்பியுங்கள்; எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்.


பேனா முனைகள், அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்தை நிலைநாட்ட எழுதிக் கொண்டே இருக்கட்டும்!

புதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

உதவியவை:

1. நிஸார் யூஸுப் Day life – JOURNISLT PAGES இதழில் எழுதிய கட்டுரை.

2. http://www.satyamargam.com/index.php?Itemid=130&id=700&option=com_content&task=view

3. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=69&Itemid=53

4. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=376&Itemid=278

5. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=203&Itemid=51

6. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=445&Itemid=53

7. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=936&Itemid=278

தொகுப்பு : அபூ ஸாலிஹா

———————————

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

—————————-

நன்றி:http://masdooka.wordpress.com

Wednesday, June 2, 2010

முன்மாதிரி முஸ்லிம்

முஸ்லிம் தனது பெற்றோருடன்

உபகாரியாக இருப்பார்
உண்மை முஸ்லிமின் தலையாயப் பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வதும் ஒன்றாகும். இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய உறவுடனும் நடந்துகொள்ள வலியுறுத்துகின்றன.

அவர்களது அந்தஸ்தையும், அவர்களுக்கான கடமையையும் அறிவார்
வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை ஈமான் கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் திருப்திக்குப் பிறகு பெற்றோரின் பொருத்தத்தை இணைத்து திருக்குர்அனின் பல வசனங்கள் காணக்கிடைக்கின்றன.

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்அன் 4:36)

உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. பெற்றோரின் மாண்புகளைத் தெளிவுபடுத்தி பெற்றோரின் விஷயத்தில் முஸ்லிம் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை திருக்குர்அன் விவரிக்கிறது. அவர்களில் இருவரோ அல்லது இருவருமோ இருந்து, வயோதிகத்தின் பலவீனத்திற்கு இலக்காகி இருந்தால் அவர்களுக்கு மனிதகுலம் கண்டிராத கெªரவத்தை இஸ்லாம் வழங்குகிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

இவ்வசனம் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனின் உறுதியான கட்டளையாகும்.
"உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றொருவரையும்) வணங்கக் கூடாதென்றும் தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியும் கட்டளை யிட்டிருக்கிறான்'' என்பது திருமறையின் கூற்றாகும்.

இதில் அல்லாஹ்வை வணங்குவது மற்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்குமிடையே உறுதியான தொடர்பு அமைக்கப்பட்டுள்ளது. மனிதப் பண்புகளை ஆய்வு செய்பவர்கள், சீர்திருத்தவாதிகள், மேதைகள் ஆகியோரின் சிந்தனைக்கு எட்டாத அளவு இதில் பெற்றோரின் அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திருவசனத்தின் உள்ளார்ந்த கருத்தைக் கவனிக்கும்போது பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்ற உயரிய நோக்கம் மட்டும் வெளிப்படவில்லை. மாறாக அன்பு, நேசம், உபகாரம் போன்ற செயல்களின் உள்ளுணர்வை மக்களின் இதயங்களில் ஊடுருவச் செய்து, தங்களது பெற்றோரின் மீது கருணை மழையை பொழியவும் தூண்டுகிறது.

"அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடமிருந்து, முதுமையை அடைந்துவிட்ட போதிலும்''
இந்த திருவசனத்தில் உள்ள "உம்மிடமிருந்து' என்ற வார்த்தையின் பொருள் உமது பாதுகாப்பில், உமது அரவணைப்பில், உமது பராமரிப்பில் என்பதாகும்.

"அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாக)ச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம்'' என்ற வசனம், இருவரும் முதுமையடைந்து பலவீனமடைந்துவிட்டால் அவர்களிடம் நிந்தனையான மனநெருக்கடியை எற்படுத்தும் எந்தவொரு வார்த்தையையும் எந்த நிலையிலும் கூறிவிடாதே. அவர்களது உள்ளமும் கண்களும் குளிரும்படியான நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

"அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) புஜம் தாழ்த்தி மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக'' என்ற வசனம் அவர்களுக்கு முன்பாக நிற்கும் போது மரியாதையுடனும், பணிவுடனும், தாழ்வுடனும் நிற்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அவர்கள் உனக்குச் செய்த உபகாரங்களையும் நீ குழந்தைப் பருவத்தில் பலவீனமாக இருந்தபோது அவர்கள் பரிபாலித்து வளர்த்ததையும் நினைவில் வைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை பின்வரும் வசனம் சுட்டிக்காட்டுகிறது.

"நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, போஷித்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக.''

பரந்த மனமும் பிரகாசிக்கும் அறிவாற்றலும் கொண்ட முஸ்லிம் அல்லாஹ்வின் இவ்வாறான அழகிய கட்டளைகளை பல திருவசனங்களில் அதிகமதிகம் கற்று தனது பெற்றோருக்கு அதிக கண்ணியமும் உபகாரமும் செய்பவராக இருப்பார்.

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்..... (அல்குர்அன் 4:36)

தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)

தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்அன் 31:14)

பெற்றோருக்கு உபகாரம் செய்வதைப்பற்றி வந்துள்ள இரங்களை சிந்திப்பவர் இறைவசனங்களைத் தொடர்ந்து பல நபிமொழிகளையும் காணமுடியும். அவர்களுக்கு உபகாரம் செய்யத் தூண்டியும் எக்காரணமாக இருப்பினும் நோவினையையும் மாறுசெய்வதையும் தவிர்க்குமாறு அவை வலியுறுத்துகின்றன.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். "பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "(ஜிஹாது) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை, தொழுகை மற்றும் இறைவழியில் போரிடுவது என்ற இரு மகத்தான கடமைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டார்கள். தொழுகை மார்க்கத்தின் தூணாகும். "ஜிஹ்ாது' இஸ்லாமின் பெருமைமிகு அமலாகும்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதை இவ்விரண்டிற்கும் இடையில் கூறியதிலிருந்து அதற்கு எத்தகு உயரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு "பைஅத்' (வாக்குபிரமானம்) செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கி அவரிடத்தில் ""உமது பெற்றோரில் எவரேனும் இருவர் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்! இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் "ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் ""உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் போருக்காக படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் வாளெடுத்து போர்புரியும் வீரர் தேவையென்றிருந்தும் தமது மென்மையான இதயத்தில் பெற்றோரின் பலவீனமும் மகனிடம் அவர்கள் தேவைப்படுவதையும் நினைக்கத் தவறவில்லை. நஃபிலான ஜிஹாதைவிட பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு முன்னுரிமை அளித்தார்கள். மனிதனின் வெற்றிக்காக அல்லாஹ் அமைத்துள்ள நடுநிலையான இஸ்லாமின் நெறிகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு அவருக்கு உபதேசித்தார்கள்.

ஸஓது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் இஸ்லாமை தழுவியதை அவர்களது தாயார் ஏற்க மறுத்து "நீ இஸ்லாமைவிட்டு விலகி வரவேண்டும். இல்லையென்றால் நான் மரணிக்கும்வரை உணவருந்த மாட்டேன்; தாயைக் கொன்றவன் என்ற அரபிகளின் அவச்சொல்லுக்கும் கோபத்துக்கும் நீ இலக்காகுவாய்'' என்று கூறினார். அவருக்கு ஸஓது (ரழி) அவர்கள் "அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது அணையாக! உமக்கு நூறு உயிர்கள் இருந்து அது ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் (நூறுமுறை மரணமடைந்தாலும்) எனது மார்க்கத்திலிருந்து விலகமாட்டேன்'' என்று பதிலளித்தார். தாய் ஒரிரு தினங்களாக சாப்பிடாமல் இருந்துவிட்டு மூன்றாவது நாள் பசியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உணவருந்தி விட்டார். அப்போது இரு திருவசனத்தை இறக்கி அதை முஸ்லிம்களுக்கு ஒதிக்காட்டுமாறு தனது தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அதில் ஸஓது (ரழி) அவர்கள் தனது தாயிடம் கடுமையான முறையில் பதிலளித்ததைக் கண்டித்திருந்தான்.

எனினும் (இறைவன் என்று) நீ அறியாததை, எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் (நன்மையான காரியங்களில்) நீ அவ்விருவருடனும் அன்புடன் ஒத்துவாழ்.... (அல்குர்அன் 31:15)

ஜுரைஜ் என்ற வணக்கசாலியின் சம்பவத்தில் பெற்றோருக்கு வழிப்படுவதன் முக்கியத்துவம் குறித்த அற்புதமான படிப்பினை உண்டு. ஒரு நாள் ஜுரைஜ் தொழுது கொண்டிருக்கும்போது அவரது தாயார் அழைத்தார். ஜுரைஜ் "இறைவனே! எனது தாயா? எனது தொழுகையா?' என்று எண்ணிவிட்டுத் தொழுகையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவதாக அழைத்தபோதும் பதிலளிக்காமல் தொழுது கொண்டிருந்தார். மூன்றாவதாக அழைத்தபோதும் அவர் பதிலளிக்காததால் அவரது தாய் அவர்மீது கோபமாக "விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யாதிருக்கட்டும்'' என்று சாபமிட்டுவிட்டார்.

சில காலங்களுக்குப் பின் ஒருபெண், ஆட்டிடையன் ஒருவனுடன் விபச்சாரம் செய்து கர்ப்பமடைந்தாள். தனது தவறு வெளியாகி விடுமென்று அவள் அஞ்சியபோது அந்த ஆட்டிடையன் அவளிடம் ""உன்னிடம் எவரேனும் குழந்தைக்குத் தந்தை யாரென்று கேட்டால், வணக்கசாலியான ஜுரைஜ் என்று கூறிவிடு'' என்றான். அவளும் அவ்வாறே கூறிவிட்டாள். இதையறிந்த மக்கள் ஜுரைஜின் வணக்கஸ்தலத்தை உடைத்தெரிந்தனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்து தண்டனை நிறைவேற்றப்படும் மைதானத்திற்கு இழுத்து வந்தனர். வரும் வழியில் தனது தாயின் துஆ நினைவுக்கு வந்து அவர் சிரித்தார். தண்டனைக்காகத் தயாரானபோது இரண்டு ரக்அத்துகள் தொழ அனுமதி கேட்டார்.

பின்பு அந்தக் குழந்தையை வாங்கி காதின் அருகில் மெதுவாக ""உன் தந்தை யார்?'' என்று கேட்டார். குழந்தை "எனது தந்தை இன்ன ஆட்டிடையன்'' என்று கூறியது. உடனே கூடியிருந்த மக்கள் தக்பீர், தஹ்லீல் கூறி "நாங்கள் உங்களது வணக்கஸ்தலத்தை தங்கத்தாலும் வெள்ளியாலும், கட்டித் தருகிறோம்'' என்றார்கள். அவர் "வேண்டாம்! முன் போலவே மண்ணால் அமைத்துக்கொடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

நபி (ஸல்) அவர்கள் "ஜுரைஜ் மார்க்கத்தை விளங்கியவராக இருந்திருந்தால் தொழுகையை நீண்ட நேரம் தொடர்வதைவிட தாய்க்கு பதிலளிப்பது அவசியம் என்பதை அறிந்திருப்பார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் நஃபில் (உபரியாக) தொழும்போது பெற்றோர்களில் இருவர் அழைத்தால் தொழுகையை முறித்துவிட்டு அவர்களது அழைப்பை ஏற்கவேண்டும்.

முஸ்லிம்களாக இல்லையெனினும் அவ்விருவருக்கும் உபகாரம் செய்வார்
நபி (ஸல்) தனது சங்கைமிக்க நல்லுபதேசங்களால் மனித நேயத்தின் உச்சநிலையை சுட்டிக்காட்டினார்கள். அதாவது பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் அவர்களுடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்துகொள்ள உபதேசித்துள்ளார்கள்.

அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை இருமுறை என்னிடம் வந்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் சென்று "எனது தாய் மிக ஆவலுடன் (உதவி கேட்டு) என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா?'' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்)

திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் இவ்வாறான கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளும் முஸ்லிம் அல்லாஹ்வின் படைப்புகளில் உபகாரத்திற்கு பெற்றோர்களே மிகத் தகுதியானவர்கள் என்பதைக் கண்டுகொள்வார். அவர்களுடன் அழகிய முறையிலான உறவை அனைத்து நிலைகளிலும் அனைத்துக் காலங்களிலும் பேணவேண்டும். இதுதான் நபித்தோழர்கள் மற்றும் நன்மையால் அவர்களைப் பின்பற்றிய சான்றோர்களின் நடைமுறையாகும்.

இருவர் ஸயீது இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் "நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன். ஆனால், அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின் பொருள் மட்டும் விளங்கவில்லை'' என்றார். ஸயீது (ரஹ்) அவருக்கு "அவ்விருவருடன் உரையாடும்போது இரு அடிமை தனது எஜமானரிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும்'' என்று விளக்கமளித்தார்கள்.

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் இரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.

அவர்களை நோவினை செய்வதுபற்றி அச்சம் கொண்டிருப்பார்
பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய ஆர்வமூட்டும் தெளிவான ஆதாரங்களை நாம் கண்டுணர்ந்தபின், வரும் பக்கங்களில் அவர்களை நோவினை செய்வது பற்றிய எச்சரிக்கைகளைக் காண்போம்! அதைப் படிக்கும்போதே பெற்றோரை நோவினை செய்யும் கடினசித்தம் கொண்ட பிள்ளைகளின் இதயம் திடுக்கிடவேண்டும். அவர்களது மனம் அஞ்சி நடுங்கவேண்டும்.

பெற்றோருக்கு உபகாரம் செய்வதும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் இணைத்துக் கூறப்பட்டதுபோல, பெற்றோருக்கு நோவினையளிப்பதை அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுடன் சேர்க்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியதாகும். அது உண்மை முஸ்லிமின் இதயத்தை திடுக்கிடச் செய்யும் கொடூரமான தீமையாகும். அதை சரி செய்துகொள்ள இதயம் துடிக்கும். ஏனெனில், அது பாவம் மற்றும் குற்றங்களில் மிகக் கொடூரமானதாகும்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள். நாங்கள் "அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நன்றி:http://www.readislam.net

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்