முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!
”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)
முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 43:23-24)
சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!
”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)
மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!
”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)
மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)
முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்….?
”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)
முன்னோர்கள் யார்?
“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
“முன்னோர்கள், பெரியார்கள்” என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.
அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட “மிகச் சிறந்த சமுதாயம்” என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டப் பெற்ற “ஸஹாபாக்கள்” இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த “நாற்பெரும் கலீபாக்கள்” இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை “முன்னோர் பெரியோர்” என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற “பித்அத்”களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.
அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?
இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!
நன்றி:readislam.net
No comments:
Post a Comment